மஹிந்தவின் தேர்தல் அறிவிப்பும் இனவாத பிரசாரங்களும்.

155
நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் களமிறங்கும் முடிவினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மாத்தறை மெதமுலனவில் உள்ள அவரது இல்லத்தில் மக்களைச் சந்தித்த அவர் இந்த முடிவினை தெரிவித்திருக்கின்றார்.

download (1)

என்னையும் இந்த நாட்டையும் நேசிக்கும் மக்களின் அழைப்பை என்னால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிராகரிக்க முடியாது. நிராகரிக்கும் உரிமையும் எனக்கில்லை.

ஆகவே இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கி போட்டியிட தீர்மானித்து விட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ள போதிலும் எந்தக் கட்சியில், எந்தச் சின்னத்தில் களமிறங்கவுள்ளார் என்பது தொடர்பில் அவர் தெளிவான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்று அவரது ஆதரவு அணியினர் கோரி வருகின்றனர்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் இந்த அணியினர் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் காணப்படும் முரண்பாடுகளை களைவதற்காக சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் 6 பேர் கொண்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவும் இருவருடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தது. பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்றும் இந்தக் குழு ஜனாதிபதிக்கு பரிந்துரையும் செய்திருந்தது.

ஆனாலும் சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் இருக்கின்ற போதிலும் சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வேட்பாளராக போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மதித்து விட்டார் என்று மஹிந்த தரப்பு ஆதரவு அணியினர் சிலர் கூறி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, குமார வெல்கம ஆகியோர் இவ்வாறான அறிவிப்புக்களை விடுத்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பதற்கு உண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என்றே தெரிகிறது. ஆனாலும் மஹிந்தவுக்கு ஆதரவான முன்னாள் எம்.பி.க்கள் அவருடன் அணி சேர்வதை தடுக்கும் வகையில் சில கருத்துக்களை அவர் தெரிவித்து வருவதாகவே தெரிகின்றது.

இந்த நிலையில் மஹிந்தவை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக ரணவக்க ஆகியோர் இருப்பதாக தெரிகின்றது.

இவ்வாறான நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் முடிவினை அறிவித்துள்ளார். ஆனால் எந்தக் கட்சியில் எந்தச் சின்னத்தில் களமிறங்கப் போகின்றேன் என்று அவர் கூறவில்லை.

இதற்குக் காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தான் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற நம்பிக்கை இன்னமும் அவரிடம் இருப்பதாகவே தெரிகின்றது.

ஏனெனில் மஹிந்த ஆதரவு குழுவினர் இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலேயே போட்டியிட வேண்டும் என இன்னமும் வலியுறுத்தி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படாவிடின் தாம் அனைவரும் அவருடன் ஒன்றிணைந்து போட்டியிடுவோம் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்த ராஜபக் ஷவை உள்ளீர்க்க வேண்டுமென்று ஓரணியும் உள்ளீர்க்கவே கூடாது என்று மற்றொரு அணியும் செயற்பட்டு வருகின்றன.

இதனால் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டாகப் பிரிந்து போட்டியிடும் நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளமையும் அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடுகின்றமையும் அவரது உரிமையாகும்.

ஜனநாயக நாடொன்றில் அரசியல் அமைப்புக்கு ஏற்றவகையில் எவரும் தேர்தலில் போட்டியிட முடியும். அதற்கு எதிராக யாரும் கருத்துக் கூறமுடியாது.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது முடிவை அறிவிக்கும் நிகழ்வில் இனவாத கருத்துக்களையும் தெரிவித்திருக்கின்றார். நாட்டை மீண்டும் இனவாதத்துக்குள் தள்ளி அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்கு மஹிந்த தரப்பு அணியினர் முயல்வதாகவே தெரிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்த இந்த 6 மாதங்களில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் பொருளாதாரமும் பாரிய சவால்களுக்கு உளளாக்கப்பட்டுள்ளது. 3 தசாப்தகாலம் தொடர்ந்த யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம்.

ஆனால் இந்த அரசாங்கத்தில் யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளுக்கு நட்டஈடு செலுத்த வேண்டுமென்று அமைச்சரவைக்கு பத்திரமொன்றை முன்வைக்குமளவுக்கு வெட்கம் கெட்டவர்கள் உள்ளார்கள் என்பதை சொல்லியாகவேண்டும். நல்லவேளை இந்த அமைச்சரவைப் பத்திரம் நிறைவேற்றப்படவில்லை.

அப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால் பயங்கரவாதிகளுக்கு- நட்டஈடு வழங்கும் உலகின் முதல் நாடு என்ற சாதனை நமக்கு கிடைத்திருக்கும். புலிகள் இயக்கத்தைப் பாதுகாக்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உரையின் போது தெரிவித்திருக்கின்றார்.

புலிகளுக்காக ஆட்சி நடத்துமளவுக்கு கீழ்த்தரமாக இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. பிரதமர் ரணிலின் நடவடிக்கைகளும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளும் 12 வருடங்களுக்கு முன்னர் புலிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட போது இருந்த மனநிலையில்தான் உள்ளது.

இப்போது பிரிவினையின் பாதையில்தான் இவர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர் என்றும் மஹிந்த ராஜபக் ஷ குற்றம் சாட்டியிருக்கின்றார்.

தற்போது நாட்டில் இனவாதிகளின் செயற்பாடுகள் சற்று குறைவடைந்துள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவான அணியினர் இனவாதத்தைக் கிளப்பியிருந்தனர்.

அத்துடன் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் செயற்பாடுகளூடாக புலிகள் மீண்டும் தலைதூக்கி நாட்டுக்கு அச்சுறுத்தலாவார்கள் என்றும் பிரசாரங்களை மேற்கொண்டனர். ஆனால் இந்த இனவாதப் பிரசாரங்களை முறியடித்து பெரும்பான்மையான மக்கள் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரித்து இருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் இவ்வாறு நிராகரிக்கப்பட்ட இனவாத செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மஹிந்த தரப்பு அணியினர் முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் போராளிகளுக்கு கடன்களை வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்றை புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தையே புலிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குற்றம் சாட்டியுள்ளதாக தெரிகின்றது.

உண்மையிலேயே முன்னாள் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது பெரும் அல்லல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடனுதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அதனை இனவாதக் கண்ணோட்டத்துடன் இவர்கள் விமர்சிப்பது கவலைக்குரிய விடயமேயாகும்.

முன்னைய அரசாங்க காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அந்த நிலையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு எவரும் முயற்சிக்கக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது அணியினரும் தேர்தலில் களமிறங்கி மக்களின் ஆணையைப் பெறட்டும். அது அவர்களது ஜனநாயக உரிமையாகும்.

ஆனால் அதற்காக இனவாதத்தைக் கிளப்பி மீண்டும் நாட்டை குட்டிச்சுவராக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

 

SHARE