மஹிந்தவின் வடபகுதி விஜயமும், அதன் பின்னணியும்

491

காலத்திற்குக் காலம் அரசாங்கத்தில் மாற்றங்கள் நிகழ்வது என்பது வழமையானதொன்றே. அந்த வகையில் முள்ளிவாய்க்காலின் ஆறாத வடுக்களை ஆற்ற முயற்சிப்பதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வடபகுதி விஜயம் அமையப்பெறுகிறது. வடபகுதியில் செறிந்துவாழக்கூடிய தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துவைப்பதன் மூலம் தனக்கென ஒரு இடத்தினைப் பிடிக்க நினைக்கின்றார் எனலாம். 20,000 பேருக்கு காணி உரிமைப்பத்திரங்களை வழங்கும் வைபவத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களை வைக்கோல் பட்டறை நாய்களென கூறியுள்ளமையும் அதனூடாக வடபகுதிவாழ் மக்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மீது வெறுப்பு ஏற்படும் என்று அரசு நினைக்கின்றது.

விடுதலைப்புலிகளினால் சூறை யாடப்பட்ட நகைகளை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, பிழையான தகவ லின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறியிருக்கின்றார் அல்லது சொல்லிக் கொடுத்தவர் சரியா கச் சொல்லிக்கொடுக்கவில்லை என்றே புலப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கென ஒரு இராட்சியத்தை நிறுவிக்கொண்டு 28 கட்டமைப்புக்களை வைத்திருந்தனர். அந்த வரிசையில் தமிழீழ வைப்பகமும் ஒன்று. அங்கு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் பணங்கள் என்பவற்றை ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையரசு கைப்பற்றியது. அதில் ஒரு தொகை பணம் மற்றும் நகைகளை சரத் பொன்சேகா கொள்ளையடித்தார். ஏனையவற்றை கோத்தபாய ராஜபக்ஷ அவர்களும், அவரைச்சார்ந்த இராணுவத்தினரும் கைப்பற்றினர். தமி ழீழ வைப்பகத்திலிருந்த நகைகளையே தற்பொழுது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் கையளிக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றார். விடுத லைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு வன்னியில் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களிடம் கொள்ளையடித்தனர் என்கின்ற வரலாறு இல்லை.
விடுதலைப்புலிகள் முதன் முதலாக திருநெல்வேலியிலுள்ள அரச வங்கியினைக் கொள்ளையடித்தது உண்மைதான். அது இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவமாகும். ஆனால் விடுதலைப்புலிகள் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் மன தில் இடம்பிடித்து தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமென்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒற்றைக்காலில் நிற்பது ஏன்?. இந்தியா, சீனா, அமெரிக்கா இந்த மூன்று நாடுக ளின் தேவைகளும் இலங்கையரசினால் தீர்க்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த நாடுகளின் நிகழ்ச்சிநிரல்களுக்கேற்பவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் செயற்படுகின்றார். அதனை மீறி செயற்படும்பொழுது சர்வதேச மட்டத்தில் கிடைக்கக்கூடிய சலுகைகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும் என்ற காரணம். அடுத்து இந்தியாவின் நிலைப்பாட்டின் படி இலங்கையில் தனிநாடு கோரப்படுமாகவிருந்தால் அல்லது அதற்கு அங்கீகாரம் வழங்கப்படுமாகவிருந்தால் இந்தியாவிலிருக்கக்கூடிய 29 மாநிலங்களும் தனித்தனியாக பிரிந்துசெல்லக்கூடிய நிலைமை ஏற்படும். அதுமட்டுமல்லாது இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இந்தியாவினுடைய பொருளாதார நடவடிக்கையில் 50சதவீதத்திற்கு மேற்பட்ட வியாபாரம் இலங்கையிலேயே இடம்பெறுகின்றது. இவை முற்றாக தடைப்படும்.
சீன அரசினைப் பொறுத்தவரையில், உலகப்போர் என்ற ஒன்று ஆரம்பிக்கப்படுமாயின் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருக்கின்ற காரணத்தினால் தனது ஆதிக்கத்தினை இந்நாட்டிற்குள் செலுத்தி விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்றவகையில் இராணுவ உதவிகளை வழங்கி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மன தில் இடம்பிடித்து இன்று இலங்கையை சீன சந்தை என்று கூறுமளவிற்கு கொழும்பு புறக்கோட்டை சுற்றுவட்டம் மாற்றமடைந்துள்ளது. அமெரிக்கா தன்னுடைய சர்வாதிகாரத்தினைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஐ.நா முன் நிறுத்தி கூண்டிலேற்ற பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தவேளை ஆசியக் கடற்பிராந்தியத்தில் திரு கோணமலைத்துறைமுகமும், இலங் கையின் கரையோரப்பகுதிகளையும் தன்வசம் பெற்றுக்கொள்கின்றது. பல்வேறு காரணங்களைக் கருதி அமெரிக்கரசு தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இலங்கையரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை கைப்பொம்மையாக வைத்திருக்கிறது. இப்பொழுது இந்த மூன்று நாடுகளினுடைய நிகழ்ச்சிநிரலும் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சியமைக்கவேண்டும் என்பதுதான்.

தற்பொழுது மேற்குறிப்பிடப்பட்ட இந்த நாடுகள் தேர்தலுக்கு முன்பதாகவே மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. அரசியல் ஆய்வாளர்களின் கருத்தின்படி பல திரில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்கப்படுகின்றது. எவை எவ்வாறிருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த இலக்குதான் என்ன? தமிழ் மக்களுடைய மனதில் இடம்பிடிப்பதாயின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சின்னா பின்னமாக உடைப்பது என்பது அவர்களது நிகழ்ச்சிநிரலில் முதலாவது விடயமாகும். அவ்வாறு இவர்களை சீர்குலைப்பதனூடாக வடபகுதி மக்களுடைய மன தில் இடம்பிடிக்க முடியும் என்கின்ற காரணத்தினால் அண்மைக்கால மஹிந்த ராஜபக்ஷவின் வடபகுதி அபிவிருத்திகள் துரிதகதியிலான வீதி மற்றும் பாலம், புகையிரதப் பாதைகள் போன்ற அபிவிருத்திகள் என அடுக்கிக்கொண்டே செல்லலாம். முள்ளிவாய்க்காலில் மக்கள் இழந்த இழப்பீட்டிற்காக மஹிந்தவால் வழங்கப்படும் நன்கொடை என அவர் நினைத்துக்கொண்டிருக்கின்றார். இவ் வாறு செய்வதனூடாக எதிர்கால சந்ததியினரின் வாக்குகளை வென்றெடுக்கமுடியும். தனது அரசினை காலங்காலமாக நிலைநிறுத்திவைக்கமுடியும் என மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நினைத்து இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னிலைப்படுத்துகின்றார்.
எவ்வாறாயினும் தன் னுடைய குடும்பத்தில் ஒருவரை நிலைநிறுத்துகின்றபோது அவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் செய்த குறைகளை சுட்டிக்காட்டி அல்லது ஊழல்வழக்குகளின் மூலம் சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல் சம்பந்தமாக சிறையில் அடைக்கப்படக்கூடும் என்றவொரு காரணத்தினாலும், தனது பரம்பரையிலுள்ள ஒருவரையோ அல்லது தனது மகனையோ நாட்டின் தலைவராக தெரிவுசெய்வதன் மூலம் இத்தனைக் குற்றங்களிலிருந்தும் தாம் தப்பிக்கொள்ளமுடியும் என்ற காரணத்தினாலும் அவருடைய வட பகுதி விஜயமும் அவருடைய அபிவிருத்திப் பணியும் இடம்பெறுகிறது. ஏனைய ஜனாதிபதியையோ அல்லது பிரதமரையோ விட மிகத்திறமையாக பலவேலைத்திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்டுவருகின்றார்.

இத்தனை நிகழ்ச்சிநிரலுக்கும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துனைபோயுள்ளார். அவருக்கு ஏகப்பட்ட வழக்குகள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழ்நிலையில் வடபகுதி மக்களின் சுயநிர்ணய உரிமை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் என்பன இதுவரை வழங்கப்படாமல் வடமாகாண சபையை தமிழ் தரப்பு பெரும்பான்மையினால் கைப்பற்றியபோதிலும் அதிகாரங்களை வழங்காமல் செயற்படுத்துவதென்பது தமிழ் மக்களின் மனதினை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வென்றெடுக்க முடியாது என்பதும் தெட்டத்தெளிவாகின்றது.தொடர்ந்து 03 நாட்களாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடபகுதியில் தங்கியிருந்து அபிவிருத்திப் பணிகளை செயற்படுத்தி வந்தார். ஆனால் வடமாகாண அபிவிருத்தி சம்பந்தமான சந்திப்புக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அதனை ஏன் நிராகரித்தோம் என்பதற்காக 14 காரணங்கள் அடங்கலாக ஒரு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையானது நியாயமான தொரு அறிக்கையாக இருந்தபொழுதிலும் அதனைச் செவிமடுக்காத மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்களின் அபிவிருத்திப் பணிகளில் இவர்கள் பங்கெடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யுத்தம் நடை பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பிரதி நிதிகளாக செயற்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அரசு டன் இணைந்து பேச்சுக்களை நடத்துவதற்கு பல்வேறு விதமாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். தற்பொழுது யுத்தம் நிறைவடைந்த நிலை யில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்காவிடின் இனி எந்த காலத்திலும் அரசு வழங்கப்போவதில்லை. மற்றுமொரு பின்னணியாக பார்க்கின்றபொழுது சிங்கள மக்களின் எதிர்ப்பினை சம்பாதித்து தமிழ்மக்களுக்கு தீர்வினை வழங்கமுடியாது. தான் தமிழ் மக்களின் மீது அக்கறையற்றவரல்ல என்பதைக் காட்டும் வண்ணமும் மஹிந்த ராஜபக்ஷவின் வட பகுதி விஜயம் அமையப்பெற்றிருக்கலாம். தமிழ் தரப்பினருக்கு ஆரம்பகாலகட்டத்தில் உதவிபுரிந்து வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவரான விஜயகுமாரதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். அதேபோல தமிழ் இனத்திற்காக குரல்கொடுத்துவந்த மறைந்த முஸ்லீம் காங்கிரசின் தலை வர் அஷ்ரப் அவர்கள் சந்திரிக்காவின் சதிமுயற்சியினால் ஹெலிகொப்டர் மூலமாக கொல்லப்பட்டார். இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவந்த ஒவ்வொருவரும் குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என பெரும்பான்மையினால் பழிவாங்கப்பட்ட சம்பவங்களே பதிவாகியிருக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வடபகுதி விஜயம் என்பது பணம் மற்றும் அபிவிருத்தியினைக் காட்டி 30 வருட போராட்ட வாழ்க்கையினையும், அதன் இலட்சியத்தையும் கூண்டோடு குழிதோண்டிப் புதைத்துவிடலாமென நினைக்கின்றார். ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகித்துள்ள இதர கட்சிகளின் செயற்பாடுகளை முடக்கி, அவர்களை பிரித்தெடுப்பதனூடாக தமிழரசுக் கட்சியினையும், ஏற்கனவே அரச ஒட்டுக்குழுக்களாக செயற்பட்ட இயக்கக் கட்சிகளையும் இலகுவாக தன்வசம் இழுத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு நோக்கத்திற்காகவும் ஜனாதிபதியினுடைய வடபகுதி விஜயம் அமையப்பெற்றாலும் தற்போதைய நிலை யில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒரு வலுவான நிலையில் இருக்கின்றது. இதையடுத்து வடமாகாண சபையில் அங்கம் வகிக்கக்கூடிய அனந்தி சசிதரன் அவர்கள் கடந்த வடமாகா ணசபைத் தேர்தலில் 89,000இற்கும் அதிகமான விருப்பு வாக்குளைப் பெற்றிருந்தார். இவருக்குக் கூட அமைச்சுப் பதவி வழங்குவதாகக் கூறி அரசு உள்வாங்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகலாம். ஆனால் தமிழர் தாயகத்திற்காக போராடிய உணர்வுடன் இருக்கக்கூடிய அனந்தி சசிதரன் அவர்கள் இம்மண்ணிற்காக அவரின் உயிரை மாய்ப்பாரே தவிர, அரசிற்கு சோரம் போகக்கூடிய ஒருவராக இருக்கமாட்டார்.

 

டக்ளஸ் தேவானந்தாவை தன்வசம் வைத்திருப்பதன் நோக்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை வெளிநாட்டவர்களுக்கு எடுத்துரைக்கின்ற பொழுது தமிழ் மக்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லையென்று அரசிற்கு ஒத்துப்பாடக்கூடியவர்கள் இக்கட்சியினரே. எனவே அவரை யும் தன்வசம் வைத்துக்கொண்டு வடபகுதியின் அபிவிருத்திகளை மேற்கொண்டுவருகின்றார். இல ங்கை வரலாற்றில் அதிநவீன நெடுஞ்சாலைகளை மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தான் அமைத்துள்ளது. வட பகுதியிலும் கூட என்றுமில்லாதவாறு வீதியின் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனைய அங்கத்துவக்கட்சிகளின் நிலைப் பாடுகளின் படி மீண்டும் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அவ்வாறு அவர் ஜனாதிபதியாக வருகின்ற பட்சம் அவருடைய சர்வாதிகார ஆட்சியை அது காட்டி நிற்கும். குறிப்பாகச் சொல்லப்போனால் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அபிவிருத்தி என்ற தோரணையில் தமிழ் பேசும் மக்களுடைய இதயங்களில் இடம்பிடித்து சர்வதேச குற்றவாளி என்ற நிலைப்பாட்டிலிருந்து தன்னை மாற்றியமைத்துக்கொள்வதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் அவர்கள் களமிறங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE