மஹிந்த அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது சரத் பொன்சேகாவை குற்றமற்றவராக நிரூபித்து அவரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் மீள ஒப்படைக்கப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இதற்கமைய அவர் குற்றமற்றவர் என அறிவித்து அவருக்கான பதவிநிலை, அந்தஸ்து என்பன மீள வழங்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த ஆட்சியின் போது 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இராணு நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு மே மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பொன்சேகாவுக்கு அவரது சிவில் உரிமைகள் மீள வழங்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய அரசாங்கம் அவரது சிவில் உரிமைகளை மீள வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.