“மஹிந்த பிரதமராவதை மைத்திரியால் தடுக்கமுடியாது- பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

176

 

“மஹிந்த பிரதமராவதை மைத்திரியால் தடுக்கமுடியாது. அவர் வாய்ப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையில் மஹிந்தவைப் பிரதமராக்கும் போராட்டத்தை நாம் ஒருபோதும் ஆரம்பிக்கவில்லை” என்று தெரிவித்த மஹிந்த ஆதரவு அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் இந்த விடயத்தில் தடுமாறிக்கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்தது.

Sri Lanka's President Mahinda Rajapaksa speaks during a meeting with foreign correspondents at his office in Colombo peiris

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு மஹிந்த வேண்டுமே தவிர, மஹிந்தவின் வெற்றிக்கு ஐ.ம.சு.மு. தேவையில்லை என்றும் தெரிவித்த மஹிந்த ஆதரவு அணி, மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவதா, இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிப்பதை விடுத்து, பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அவருக்கு இடமளியுங்கள். யார் பிரதமராக வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என்றும் தெரிவித்தது.

நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ஸ எம்.பி., “அடுத்த பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கவில்லை. தவறான விளக்கங்களை வழங்கவேண்டாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் மஹிந்த வேண்டும் என்கிறது.

அதனால்தான் மஹிந்தவுடன் பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார். அவர்தான் யோசனையை முன்வைத்துள்ளார். ஆனால், அதற்கிடையில் அமைச்சர் ராஜித சேனாரட்ன அனைத்தையும் குழப்பிவிட்டார். அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியது ஜனாதிபதி மைத்திரியின் கருத்தாக இருந்தால், அதற்கு அப்பால் கூறுவதற்கு ஒன்றுமில்லை. மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராவதை மைத்திரியின் கருத்து ஒருபோதும் தடுக்காது. ஜனாதிபதி மைத்திரி வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்த்து நாம் இந்தப் போராட்டத்தை பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கவில்லை.

நாம் எமது நடவடிக்கையை முன்னெடுப்போம். நீங்கள் எதிர்காலத்தில் அதைப் பார்க்கலாம்” – என்றார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில, “ஐயோ… எனக்குப் பிரதமர் வேட்பாளர் பதவியைத் தாருங்கள் என மஹிந்த ராஜபக்‌ஷ ஒருபோதும் கோரவில்லை. இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சினை. நம் கோரிக்கை விடுத்து, நிராகரிக்கப்பட்டிருந்தால்தான் பிரச்சினை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் மஹிந்த வேண்டும் என்கிறது. நாம் வெளியில் கொண்டுசெல்லும் போராட்டத்தை அவர்கள் உள்ளே நடத்துகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெறுவதற்கு மஹிந்த வேண்டுமே தவிர, மஹிந்தவின் வெற்றிக்கு ஐ.ம.சு.மு. தேவையில்லை” – என்றார். மஹிந்தவை இணைத்துக்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரியால்தான் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால், அதற்கிடையில் அனைத்து நடவடிக்கைகளும் சீர்குலைக்கப்பட்டன. என்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி. இதன்போது குறிப்பிட்டார்

SHARE