புங்குடுதீவு மாணவி கூட்டுவல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டமைக்கு மாணவியின் தாயாருக்கும் சந்தேகநபர்களுக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என அறிய வருகிறது. இதனாலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார். இதனிடையே அவர் பலரால் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவில் கடந்த புதன்கிழமை கடத்தப்பட்ட வித்தியா கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் மறுநாள் வியாழக்கிழமை பற்றைக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரது கொலைக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் வியாழக்கிழமை இரவு 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் விளக்க மறியலில் வைத்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மேலும் 5 பேரை பொலிஸார் கைது செய்தனர். இவர்களை குறிகாட்டுவான் பொலிஸ் காப்பரனுக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது இது குறித்து அறிந்த மக்கள் அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி பெருமளவில் கூடினர். சந்தேகநபர்களை பொலிஸார் மக்களிடம் இருந்து காப்பாற்ற முயன்றதால் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. மக்களிடம் இருந்து சந்தேகநபர்களைக் காப்பாற்றி ஊர்காவற்றுறை பொலிஸ் பொலிஸ்நிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
இதைத் தடுக்க மக்கள் மின்கம்பங்கள், மரக்குற்றிகளை வீதிகளின் குறுக்கே போட்டும் ரயர்களை கொளுத்தியும் பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர். இதனால் வீதிவழியாக சந்தேகநபர்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படவே குறிகாட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு சந்தேகநபர்களை கொண்டு சென்று அங்கிருந்து கடல் வழியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸ் காவலரண் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கும் மக்கள் வருவதை அறிந்த பொலிஸார் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதன்போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்:- கைதானவர்களில் நால்வர் கொழும்பில் வசிக்கின்றனர். அவர்கள் வேலணை பிரதேச சபையில் பணியாற்றும் ஒருவரின் வீட்டில் நடந்த விருந்து ஒன்றில் பங்கேற்றிருந்தனர். புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் பிரதேச சபையில் பணியாற்றும் நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதனை முன்னர் கைதான மூவரில் ஒருவரே எடுத்தார். அழைப்பை ஏற்படுத்தியவர்ஒரு பெண்ணொன்று உள்ளது வருமாறு கூறியிருக்கிறார். அப்போது தாங்கள் மதுபோதையில் இருந்தனர் என்றும், தாங்கள் அங்கு சென்ற போது குறித்த பெண்ணின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததாகவும் அதன் பின் தாங்கள் சில மணி நேரம் அங்கு இருந்து விட்டு வந்து விட்டதாகவும், அதன் பின்னர் என்ன நடந்தது என்று தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர் எனினும் இந்தத் தகவல்களை அதிகாரம் மிக்க எவரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.