மானிப்பாயில் பாடசாலை மாணவியைக் கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய உறவினர் கைது

278
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி நேற்றுமுன்தினம் பாடசாலையில் நடக்கவுள்ள விளையாட்டுப் போட்டிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இதன்பின்னர் குறித்த மாணவியை அவரது ஒன்று விட்ட சகோதரன் ஒருவர் முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றதாகவும் அதனையடுத்து மாணவி தொடர்பாக எந்த தகவல் எதுவும் தெரியாத நிலை காணப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று குறித்த மாணவி மயக்கமடைந்து அநாதரவாக யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையான வீதியில் கிடந்துள்ளார்.

அவ்வாறு கிடந்த மாணவியை அப்பகுதிக்கு சென்றவர்கள் கண்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள மானிப்பாய் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து, சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE