பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் உள்ளவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு,தொடர்ந்து பாதிப்புகள் எதிர்நோக்கவுள்ள பகுதிகளில் உள்ள மக்களை நிரந்தரமாக குடியேற்றம் செய்யப்படுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று திங்கட்கிழமை பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட கொஸ்லாந்த,மீரியபொத்த பகுதிகளுக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பகுதிகளில் பகுதிகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும் விஜயம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து பதுளை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராந்துள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள்,பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் இதன்போது இணைந்திருந்ததுடன் மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதா கிருஸ்ணன்,மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மற்றும் அவரது மாகாணசபை உறுப்பினர்களும் இதன்போது இணைந்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,
பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட கொஸ்லாந்த,மீரியபொத்த பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தோம்.அத்துடன் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும் விஜயம் செய்தோம்.
அங்கு சுமார் 2000பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.ஒரு முகாக்குள் ஆண்கள் பெண்கள் ஒன்றாக அடைக்கப்பட்ட நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக பெண்கள் பெரும் கஸ்ட நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்தது.
அத்துடன் குடிநீர் இல்லாத நிலையும் மின்சாரம் இல்லாத நிலையிலேயும் மிகவும் கஸ்டமான நிலையில் அந்த மக்கள் உள்ளதை அவதானித்தோம்.இது தொடர்பில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவந்தோம்.
அப்பகுதிகளில் எதிர்காலத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாய நிலையுள்ளது.இதன் காரணமாக 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையுள்ளது.இந்த மக்களை வேறு பகுதிகளில் குடியேற்றம் செய்வதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாக செய்யவேண்டும்.
அவர்களை குடியேற்றம் செய்வதற்கு உரிய இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் குடியேற்றம் செய்யப்படவேண்டும்.இவர்களில் பலர் கூலித்தொழில் செய்பவர்களாகவும் தோட்டங்களில் வேலைசெய்பவர்களாகவும் உள்ளனர்.இவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத வகையிலும் அல்லது அவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய பகுதியாகவும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் குடியமரச்செய்யப்படவேண்டும். அத்துடன் அவர்கள் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்பதை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வலியுறுத்தினோம்.
இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் மக்கள் இன்று இந்த மக்களுக்கு அதிகளவில் உதவிசெய்துவருகின்றனர்.எதிர்காலத்தில் இந்த மக்களுக்கு உதவுவதற்கு பெருமளாவான பணங்களை அனுப்புவதற்கும் தயாராகவுள்ளனர் என்பதை அரசாங்க அதிபரிடம் தெரிவித்தோம்.
இவ்வாறான உதவிகளை ஒருங்கிணைத்து அவற்றினை பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் மலையக பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து சிறந்த திட்டமிடலை மேற்கொண்டு இந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என நான் அவரிடம் தெரிவித்தேன்.
அப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை சரியான முறையில் சென்றடையவேண்டும்.அவை தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும்.
நாங்கள் சென்ற பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கும் கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,சரவணபவன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சிறிதரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,மலைய மக்கள் முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்கள்,சிறிதுங்க விஜயசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.