மின்சார தடையால் ஸ்தம்பித்த வெனிசுலா

395

தென்அமெரிக்க சோஷியலிச நாடான வெனிசுலாவில் நேற்று ஏற்பட்ட மின்சார செயலிழப்பு நாட்டின் 23 மாநிலங்களில் ஒன்பதைப் பாதித்தது. போக்குவரத்து மற்றும் பொது அலுவலகங்களின் செயல்பாடுகளைப் பாதித்த இந்த இருட்டடிப்பு அந்நாட்டின் அதிபர் பங்கு பெற்ற ஒரு தொலைக்காட்சி விழாவையும் பாதித்தது.

அதிபர் மாளிகையில் நிக்கோலஸ் மதுரோ பத்திரிகையாளர்களுடன் பங்கு பெற்றிருந்த விழா ஒன்று இதனால் தடைப்பட்டது. நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் மின்உற்பத்தி நிலையத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பத்தில் ஏற்பட்ட செயலிழப்பே இந்த நிலைமைக்குக் காரணம் என்று அந்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் ஜெஸ்சி சகோன் தெரிவித்தார்.

எனினும் நேற்று இரவு வரைகூட பல இடங்களில் நிலைமை சீரடையவில்லை. இந்த மின்சார செயலிழப்பினால் சுரங்கப்பாதை மற்றும் ரயில் சேவைகள் நாடு முழுவதும் துண்டிக்கப்பட்டன. தலைநகர் காரகாசில் நடைபாதை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பலர் சாலையிலும் நடந்து சென்றனர்.

புறநகர்ப் பகுதிகளில் இரவு நீண்ட நிலையிலும் மின்சாரம் இல்லாமல் இருந்தபோது தலைநகரின் மையப்பகுதியில் அவ்வப்போது மட்டுமே தடைகள் ஏற்பட்டன. அனைத்து மாநிலங்களுக்கும் மீண்டும் மின்சார விநியோகத்தை ஏற்படுத்தித் தந்தபோதும் காரகாசிற்கு முன்னுரிமை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் தலைநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது 12 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு மின்சாரம் தடைப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 மற்றும் 13-ம் ஆண்டுகளிலும் வெனிசுவேலாவில் இதுபோன்ற பெரிய அளவிலான மின்தடைகள் ஏற்பட்டன. அப்போது அரசாங்கம் இதனை நாசவேலை என்று குறிப்பிட எதிர்க்கட்சியினரோ அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் என்று விமர்சனம் செய்தனர். சில நேரங்களில், உடும்பு, மர எலி போன்ற வனவிலங்குகள் மின்சார இணைப்புகளை கடித்துக் குதறிவிடுவதுவும் அரசு நிர்வாகத்தால் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

இதனால் நேற்றைய மின்தடையின்போது அவதியுற்ற பொதுமக்கள் பலரும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க உடும்புகளின் படங்களைத் தங்களின் இணையதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தனர்.

SHARE