முட்டை விலை உயர்வு

16

 

முட்டையொன்றின் விலையினை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் புத்திக வீரசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (12) முதல் முட்டை விலையை உயர்த்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டைக்கான விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், அதனுடன் தொடர்புடைய ஏனைய வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முட்டைக்கு தட்டுப்பாடு
அதன்படி இன்று (12) முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 63 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது, சதொச வர்த்தக நிலையங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்ததாகவும் இதன்போது கூறப்பட்டிருந்தது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள்
இதன் காரணமாக முட்டையின் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில் இன்று (12) முதல் முட்டையின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றுக்கிடையே, நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 7 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE