முதலை கடிக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் பலி

43

 

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தொடுவான் குளத்தில் குளிப்பதற்குச் சென்ற இளம் குடும்பஸ்தரைத் தண்ணீருக்குள் முதலை இழுத்துச் சென்று கடித்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோப்பூர் – பாட்டாளிபுரத்தில் வசித்து வரும் கதிர்காமத்தம்பி நிதுர்ஷன் (வயது 20) எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வயல் ஒன்றைப் பார்வையிட்டு வரும் கணவனும் மனைவியும் நேற்று (30.11.2023) குளிப்பதற்காகக் குளத்துக்குச் சென்றபோது கணவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.

கிராம மக்களின் தேடல்
மனைவி கணவனை காப்பாற்ற முயற்சித்த போதும் காப்பாற்ற முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல மணி நேரம் குளத்தில் தேடுதல் மேற்கொண்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE