முதல்வர் விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்கக் கூடாது

151

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு நிதி கொடுக்கப்பட்டதாக வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களிடம் நிதியை வழங்குவதன் மூலம் வடக்கு மாகாணசபை புறக்கணிக்கப்படுவதாக வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அபிவிருத்தி தொடர்பில் நிதி வழங்கப்படுவதாக இருந்தால் அந்த நிதி வடக்கு மாகாணத்தில் இருக்கக் கூடிய மாகாண அரசிடமே கையளிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் வடக்கு மாகாண அரசிற்கான அதிகாரம் சரியாக வழங்கப்பட வேண்டும் என நாம் கூறும் போது அது சகல விடயங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது நியாயத்துவமானது.

வடக்கு மாகாணத்திற்கான நிதியென்றால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கையளிக்கலாம். அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைமை இருக்குமாயின் அது மிகப்பெரிய பிழையாகும்.

எதெது மாகாண சபைக்கூடாக செய்யப்பட வேண்டுமோ அததது மாகாணச் சபைக்கூடாக செய்யப்பட வேண்டும். இதில் விவாதங்கள், தர்க்கங்கள் தேவையற்றவை. அதே சமயம் மாகாண சபைக்குரிய அதிகாரங்களை பெற்றுக்கொள்வதில் முதலமைச்சரின் பங்கும் பணியும் மிகவும் முக்கியமானதாகும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் மாகாண அரசை ஓரம் கட்டுவதான சம்பவங்கள் நடந்தால் அதனை இந்த நாட்டின் ஆட்சித் தலைமையிடம் தெரியப்படுத்துவது பொறுப்பு வாய்ந்த முதலமைச்சரின் கடமையாகும்.

அந்த வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர், ஜனாதிபதி மைத்திரியிடம் சில விடயங்கள் பற்றிச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சருடன் கதைக்கவும் மாட்டேன். அவரை சந்திக்கவும் மாட்டேன். திரும்பிப் பார்க்கவும் மாட்டேன் என்று கூறியவர் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எனவே வடக்கு மாகாண அரசை புறக்கணித்து நிதி வழங்கலை இடமாற்றக் கூடிய சம்பவங்கள் நடப்பது சாத்தியமாகக் கூடும்.

எதுவாயினும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடமும் மேற்குறித்த விடயம் பற்றி விளக்கம் கேட்பது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் எடுத்த தீர்மானம் எங்களை நாங்களே கேவலப்படுத்துவதாகும்.

வடக்கின் முதல்வரிடம் விளக்கம் கேட்கும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. வடக்கு மாகாண சபையின் தேர்தல் வெற்றி என்பது ஓய்வு பெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தியமையால் கிடைத்தமையாகும். ஆகவே, விக்னேஸ்வரனின் வெற்றியில் எவரும் பங்கு போட முடியாது.

அதே சமயம் எமது முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் நிச்சயம் முதல் வருக்கு எதிரானவர்களாகவும் பிரதமருக்கு ஆதரவானவர்களாகவும் இருப்பர் என்பதும் நிறுத்திட்டமான உண்மை.

எதுவாயினும் சலசலப்புகளுக்கு அஞ்சாதவர் வடக்கின் முதல்வர். ஆகையால் எந்த விளக்கத்தையும் அவர் கொடுக்கமாட்டார்.

நான் வடக்கின் முதலமைச்சராவதற்கு முன்னதாக இந்த நாட்டின் நீதியரசராக இருந்தேன் என்பதை அவர் நிச்சயம் மார்தட்டி சொல்வார் என நம்புகிறோம்.

SHARE