முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் 6 மணி நேரம் விசாரணை

335
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 6 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.

பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்கள், சிறப்புரிமை, அதிகாரம் போன்றவற்றை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கும் ஆணைக்குழுவில் கோத்தபாய ராஜபக்ச இன்று ஆஜராகினார்.

விசாரணைகளின் பின்னர், அங்கிருந்து வெளியேறிய அவரிடம் எது குறித்து விசாரணை நடத்தப்பட்ட என ஊடகவியலாளர்கள் கேட்டனர்.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ரக்னா லங்கா நிறுவனம் ஓய்வுபெற்ற மற்றும் இராணுவத்தில் இருந்து விலகியவர்களை கொண்ட ஒரு நிறுவனமாகும். தற்போது உங்களுக்கு செய்திகள் இல்லைதானே எனவும் கோத்தபாய கூறினார்.

விசாரணைகளில் நீங்கள் என்ன கூறினீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டனர். அவற்றை கூறுவது சரியல்ல. அவை தேவையில்லை எனக் கூறிக்கொண்ட கோத்தபாய தனது வாகனத்தை நோக்கி நடந்து சென்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கோத்தபாயவுக்கு அழைப்பாணை

பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவரை இன்று ஆணைக்குழு முன் அஜராகுமாறு அறிக்கப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா நிறுவனம் சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே கோத்தபாயவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 அளவில் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆணைக்குழுவின் முன்னிலையில் கோத்தபாய ஆஜர்

அழைப்பாணையை அடுத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இரு பாதுகாப்பாளர்களுடனே வருகை தந்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோத்தபாய, இது எல்லாம் எனக்கு ஒரு சிறிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE