முன்னாள் போராளியின் படுகொலை தொடர்பில் பொலிஸார் வெளிப்படத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல்.

343
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.
குறிப்பாக காணி அபகரிப்புகள், வளப்பங்கீடுகளில் பாரபட்சம், குளறுபடி போன்ற விடையங்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். மாவட்ட – பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் கூட, அவர் தனது கிராம மக்கள் சார்பாக கலந்துகொண்டு பல்வேறுபட்ட பிரச்சினைகளை துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்தமையை நான் அவதானித்திருக்கிறேன்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு இன்று(15.11) சென்று பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களுடனும், நகுலேஸ்வரனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடனும் துக்கம் விசாரித்து கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நகுலேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாகவும், படுகொலைக்கு பயன்படுத்திய ரி-56 வகை துப்பாக்கியை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதி நியாயமாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
ஏனெனில் யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களை கடந்து பயணித்துக்கொண்டிருக்கும் சாதாரண நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழந்திருக்கும் முதலாவது சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் தொடர்பில், விடுவிக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவரும் தத்தமது எதிர்காலம் தொடர்பில் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். வடக்கு முழுவதும் இச்சம்பவத்தால் ஒருவித பதட்டம் மேலோங்கி காணப்படுகின்றது.
எனவே பொதுமக்களின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை குழப்பியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையும் படுகொலையையும் வன்மையாக கண்டிப்பதோடு, நகுலேஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கைப்பேணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசு முனைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2  5     6  7
SHARE