மும்பை கோட்டையை தகர்த்தது சென்னை

619
  • வான்கடே மைதானம் மும்பை அணியின் கோட்டை என்று கடந்த ஓர் ஆண்டாக நீடித்து வந்த வரலாற்றை தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் சனிக்கிழமை இரவு மாற்றி அமைத்தனர்.

மும்பை நிர்ணயித்த 158 என்ற வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அசத்தலாக வெற்றி பெற்றது. இத்துடன், வான்கடே மைதானத்தில் மும்பை தொடர்ச்சியாக பெற்ற 10 வெற்றிகள் என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது.

மும்பையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

கடந்த ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த சிதம்பரம் கெளதம் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் களமிறங்கிய அம்பாட்டி ராயுடு, தொடக்க வீரர் சிம்மன்ஸýடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி இருபது ஓவர் என்பதை மறந்து டெஸ்ட் ஆட்டத்தைப் போல விளையாடியது. அதனால், விக்கெட் வீழ்ச்சி தடுக்கப்பட்டாலும் அணியின் ஸ்கோர் விகிதம் ஏறவில்லை. அதற்கு சென்னை வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் காரணமாக அமைந்தது.

கடைசி நேரத்தில் சிக்ஸரை குறி வைத்து பேட் செய்த சிம்மன்ஸ், ரோஹித், போலார்டு, ராயுடு, தாரே ஆகியோர் எல்லைக் கோட்டுக்கு அருகே கேட்ச் செய்யப்பட்டனர். அதிகபட்சமாக ராயுடு 59 ரன்களை எடுத்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை மும்பை எடுத்தது. சென்னைத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வேயன் ஸ்மித் 57: பின்னர் பேட் செய்த சென்னை 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பொறுமையுடன் விளையாடிய ஸ்மித், 57 ரன்கள் எடுத்தார். இதில், 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும். கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய ஸ்மித், அந்த அணிக்கு எதிராக சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் தன்னை அணிக்கு மீண்டும் தேர்வு செய்யாதது தவறு என்று உணர்த்தும் விதமாக அமைந்தது. மற்ற வீரர்களில் டூ பிளஸ்ஸிஸ் 31 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் கூல்: இறுதிக் கட்டத்தில் பந்து வீசிய மலிங்கா, தனது சிக்கனத்தை வெளிப்படுத்த சென்னைக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை போலார்டு வீசினார். கேப்டன் கூல் என்று பெயர் பெற்றுள்ள தோனி, களத்தில் இருந்தபோதும் ஆட்டத்தில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது.

முதல் பந்தில் சென்னைக்கு 3 ரன்கள் கிடைத்தன. பரபரப்பை ஆட்டத்தின் கடைசி பந்து வரை கொண்டு செல்ல விரும்பாத தோனி கடைசி ஓவரின் 2 மற்றும் 3-வது பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். ஆட்ட நாயகன் விருதை ஸ்மித் பெற்றார்.

இந்த வெற்றியின்மூலம் புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 2-வது இடத்திலேயே சென்னை தொடர்கிறது.

SHARE