முல்லைத்தீவு விநாயகபுரத்தில் 22.7 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

182

 

முல்லைத்தீவு விநாயகபுரத்தில் 22.7 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்து, அதனை இத்திட்டத்தின் பயனாளிகளான விநாயகபுரம் விவசாயிகளிடம் கையளித்துள்ளார்.

போரினால் இடம்பெயர்ந்த விநாயகபுரம் மக்கள் மீளக்குடியேறியதன் பின்னர் நீர்ப்பாசன வசதிகள் இல்லாமையால் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாமல் இருந்தனர்.

இது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து வவுனிக்குளம் இடதுகரை வாய்க்காலில் இருந்து நீரைப்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 130 விவசாயக் குடும்பங்கள் பயன் அடையவுள்ளன.

விநாயகபுரம் ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்தில்; கால்வாய்களுக்குப் பதிலாக குழாய்களின் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதோடு, ஒவ்வொரு விவசாயியும் தான் பயன்படுத்தும் நீரின் அளவை அறிவதற்கேற்ற முறையில் விவசாயக் காணிகளில் தனித்தனியாக நீர் அளவைமானிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

நீர் விரயமாகாத விதத்தில் இவ்வாறானதொரு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் வடக்கில் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்ற இத்திறப்புவிழா நிகழ்ச்சியில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சண்முகானந்தன், ஓய்வுநிலை நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள் ந.சுதாகரன், ந.நவநேசன் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

SHARE