இந்த பூமியிலேயே இறுதி யுத்தம் முடிவடைந்தது. அந்த கடந்த கால கசப்பான சம்பவங்களை நாம் இனி மனதில் வைத்திருக்கக்கூடாது அதிலிருந்து விடுபட்டு ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இன்று வியாழக்கிழமை முள்ளியவளை ஐயனார் கோயில் வளாகத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னை தெரிவுசெய்யுங்கள். உங்களுக்கான அனைத்தையும் நான் பெற்றுத் தருவேன். பயங்கரவாத யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளோம்.
அதில் உங்கள் பிரதேசங்களும் அடங்குகின்றன. இன்னும் பல அபிவிருத்திகளையும் முன்னெடுப்போம் – என்றார். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ச.கனகரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். எனினும் நண்பகல் ஒரு மணிக்கு வந்த ஜனாதிபதி 2 மணியளவில் கூட்டத்தை முடித்து திரும்பினார்