முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு, உலக நாகரீகத்தின் ஒரு அசிங்கம் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் உளப்பகிர்வு

367

 

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு, உலக நாகரீகத்தின் ஒரு அசிங்கம் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் உளப்பகிர்வு
unnamed
முள்ளிவாய்க்கால் வரை வஞ்சக வார்த்தைகளால் ஏமாற்றப்பட்ட எமது மக்கள் கொலைகளம் என்று தெரியாது அங்கே சிறைப்பட்டுக் கொண்டார்கள். நயவஞ்சகர்கள் தங்களால் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்று தெரிந்திருந்தும். பாதுகாப்பு வலயம், யுத்த தவிர்ப்பு வலயம், என நாடகமாடினர். அதையும் நாகரீக சர்வதேசம் நம்பியது மட்டுமல்ல தமிழர்களுக்கு சிபார்சு வேறு செய்தார்கள். எதையும் மதிப்பீடு  செய்ய காலம் கிடைக்கவில்லை, உண்ண உணவு கிடைக்கவில்லை, உடுக்க  உடுபுடவை இல்லை, படுக்க பாய் இருக்கவில்லை, கிடைத்ததோ மண்ணை தோண்டிய பங்கர்கள் என்று சொல்லப்பட்ட புதைகுழிகள். யுத்த தவிர்ப்பு பாதுகாப்பு வலயம் என்று சர்வதேசத்தின் சிபார்சுடன் அமைக்கப்பட்ட பிரதேசத்தில் காட்டுமிராண்டித் தனமான ஆட்லறி செல்களை ஏவினர், போதாதக்கு பரல் பரலாக அடையாளம் தெரியாத ஆயுதங்களை மக்கள் மீது விமானத்தில் இருந்து விசிறினர். ஊயிர்களை காவு கொடுத்தவர்கள் உயிர் பாதுகாப்பு வேண்டி புகுந்து கொண்ட பங்கருக்குள்ளேயே போட்டு மூடப்பட்டார்கள். அங்கு இறந்த உடல்களை அடக்கம் செய்ய ஒரு ஒழுங்குமுறையும் இருக்கவில்லை, இடமும் இருக்கவில்லை, தினசரி ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களை அடக்கம் செய்ய எப்படி ஒரு சிறு பிரதேசத்தில் ஒழுங்படுத்துவது. இருந்த பங்கர்கள் புதைகுளியாக, எஞ்சிய குடும்பத்தவர்கள் மீண்டும் ஒரு பங்கர் தோண்டினார்கள். அன்று அவர்களுக்கு தெரியவில்லை அவர்கள் தோண்டுவது பாதுகாப்பு பங்கர் இல்லை அவர்களுக்கான புதைகுழி என்று. இறுதிவரை மக்கள் நம்பினார்கள் ஐ.நா சபை வரும், அமெரிக்கா வரும் ஏன் அயல்நாடு இந்தியா வரும் என்று. இறுதியில் உலக நாகரீகத்தின் அசிங்கம் முள்ளிவாய்க்காலில் நிறைவேறியது.
இன்று முள்ளிவாக்காலில் நாங்கள் மெழுகுதிரி கொழுத்தலாமாம், செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாம், சந்தோஷமாக நாம் சென்று முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு மட்டும் மௌன அஞ்சலி செலுத்தலாமாம், மீண்டும் உலக வஞ்சகத்தனம் அரங்கேறுகிறது. உயிரிழந்தவர்களுக்காக ராஜதந்திரி ஒருவர் அண்மையில் அஞ்சலி செலுத்தினார். எமது பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டபோது சதையும் பிண்டமுமாக சர்வதேச ஊடகங்களின் வீடியோக்களில் நேரடி ஒளிபரப்பு செய்தபோது, லட்சக்கணக்கான புலம் பெயர் தமிழினம் றோட்டினிலே தாயக உறவுகளுக்காய் மன்றாடியபோது, எங்கு போனது அவர்களின் மனிதாபிமானம் அவர்கள் கட்டிக் காக்கும் மனித உரிமைகள், நாகரீகங்கள், இவர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில் நடந்த அசிங்கங்களை மூடிமறைத்த கயவர்கள்.
இன்று நேபாளத்தில் பூகம்பம் புதைத்தவர்களை தோண்டி தேடுகிறதாம் நாகரீக உலகம். ஏனெனில் இறந்தவர்கள் அடையாளம் காணப்படவேண்டுமாம், மரணச்சடங்கு செய்யவேண்டும், உறவினர்கள் அஞ்சலி செலுத்தவேண்டுமாம்.முள்ளிவாய்க்காலில் புதைக்கபப்பட்டவர்களை தேட, அடையாளம் காண உலக நாகரீகத்தின் பாதுகாவலன் ஒருவனாவது வந்தானா. ஏன் யுத்தம் முடிந்த மறுநாள்சரி வந்தார்களா இல்லையே, அனைத்து பங்கர்களும் கூடாரங்களும் இறந்த உடல்களுடனும், படுகாயமடைந்த மனிதர்களுடனும் டோசர் போட்டு ஒரேயடியாக தள்ளிமூடப்பட்டபின் மிஞ்சிய தரைவெட்டையை உலங்கு வர்Çர்தியில் பார்வையிட்டாராம்  ஐ.நா சபையின் கௌரவ செயலாளர் பான்கிமூன் அவர்கள். அன்று ஐ.நா சபையின் மீட்புப் பணியாளர்கள் வந்திருந்தால் தெரிந்திருக்கும் இனப்படுகொலையின் மறுவடிவம். வந்தது மீட்பதற்கு அல்லவே மூடிமறைப்பதற்கல்லவா. 
என்ன செய்யும் தமிழினம். கொல்லப்பட்டது ஈழத்தமிழினம் அல்லவா கூட்டறிக்கை விட்டவர்கள் இன்று வேறு பதவிதேடி அலைகிறார்கள். ஈழத்தமிழன் உலகில் பணம்தேடி அலைகிறான். இனபடுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் மீது பணம் கழவெடுத்த வழக்கு போடுகிறார்கள். எமது இனத்தையே கருவறுத்தவர்கள் மீது யார்தான் வழக்கு போடுவார்களோ. எரிந்த எமது நெஞ்சில் என்றும் மாறாது அந்த வடு என்பது அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். முடிந்தது முடிந்ததுதான்.
இனிமேல் இழப்புக்கள் வேண்டாமாம். உண்மைதான் ஆனால் முடிந்ததை கொண்டுபோய் அடக்கம் செய்ய ஒரு சுடலையைத் தாருங்கள் எல்லாம் விட்டு விடுவோம். அதற்கும் உங்களுக்கு மனம் இல்லையே.
என்று நாம் முள்ளிவாய்க்கால் தமிழின கொலைகளுக்கு பொறுப்புக் கூறப்பட்டு உலக நீதியின் முன் குற்றவாழிகள் தண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்த ராணுவத் தலையீடுகளும் நீக்கப்பட்டு எமது வாழ்வுரிமைக்களுக்கான காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டு எம்மை நாமே ஆளும் சுயாட்சி அலகின் கீழ் தனியான தமிழ்பேசும் பொலிஸ்படை அமைக்கப்பட்டு  எமது கல்லறை, மறவர்களின் கல்லறைகள் மீண்டும் கட்டப்பட்டு எமது இறந்த அனைத்து உயிர்களுக்கும் நினைவு கூரும் நாகரீக நாள் உருவாகிதோ அன்றுதான் எமது பாதி விடுதலை கிடைத்த நாளாக நாம் சந்தோசமடைய முடியும்.
SHARE