முஸ்லிம்களின் பள்ளிவாயலை நாம் பாதுகாப்போம்: மஹிந்த:-

420

 

முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை நாம் பாதுகாப்போம் என ஜனாதிபதி மஹிந்த  ராஜபக் ஷ தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில்   நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காத்தான்குடிப் பிரதேசம் எனக்கு புதிய இடமல்ல. நான் இங்கு பல தடவைகள் வந்துள்ளேன். உங்கள் பள்ளிவாயலுக்கு அத்திபாரம் போடுவதற்கு நான் இங்கு வந்தேன்.
அது நான் செய்த பாக்கியமாகும். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எங்கள் வீட்டுப் பிள்ளை. இந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப என்னை நீங்கள் பூரணமாக நம்பலாம்.
காத்தான்குடியில் நான் செய்த அனைத்து அபிவிருத்தி வேலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். பல கோடி ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் சூலேஸ் திட்டம் காத்தான்குடியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளேன்.
பல்கலைக்கழக கல்லூரியை வழங்கியுள்ளேன். முஸ்லிம்களின் கலாசாரம், வரலாறுகளை பாதுகாக்க இஸ்லாமிய நூதனசாலையை காத்தான்குடியில் நிர்மாணித்துள்ளோம்.
காத்தான்குடியில் இடம்பெற்ற பள்ளிவாயல் படுகொலைச் சம்பவம் இனிமேல் இடம் பெற முடியாது.
இன ரீதியான அரசியல் வேண்டாம். நாம் எல்லோரும் ஒரே தாயின் பிள்ளைகளே. இலங்கைத் தாய் மக்களே நாம்.
அரசாங்க வானொலியில் ஐந்து நேரமும் அதான் சொல்லுவதை ஆரம்பித்தது நான்தான். முஸ்லிம் மக்கள் எப்போதும் எமது சகோதரர்கள். முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை எப்போதும் நாம் பாதுகாப்போம்.
பள்ளிவாயல்களை நிர்மாணிக்க நாம் உதவி செய்வோம். உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை நீங்கள் யோசிக்க வேண்டும்.
அனைத்து மக்களையும் பாதுகாப்போம். இன வாத அரசியல் வேண்டாம். பொய்ப்பிரசாரத்தை நம்ப வேண்டாம்.
நாம் முன்னோக்கிப் போவதா அல்லது பின்னோக்கிப் போவதா என்பதை நீங்கள் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
ஒளிமயமான எதிர்காலத்துக்காக என்னுடன் சேருங்கள். ஆசியாவின் அதிசயமான நாடாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் தெரிவித்தார்.
SHARE