மூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை பிடித்து சித்திரவதை செய்தது; தாய் சாட்சியம்-மன்னார் சிறப்பு தளபதி ஜானின் மனைவி

477
எனது கணவரை ஒருமுறையாவது காட்டுங்கள்..எனக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என முன்னாள் விடுதலைப் புலிகளின் மான்னார் சிறப்புத் தளபதி ஜானின் மனைவி ஆணைக் குழு முன் கண்ணீர் மல்க கதறி அழுதார்.

முல்லைத்தீவில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையிலான சுமார் 40 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இது வரை அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என, காணாமல் போன தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்புத்தளபதி யான் என அழைக்கப்படும் அந்தோனி ராயப்புவின் மனைவி ராயப்பு மிறோனியா இன்று மடு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

Sans_titre-1_copie

இது தொடர்பாக மடு பெரிய பண்டிவிருச்சானை வதிவிடமாகக் கொண்டுள்ள ராயப்பு மிறோனியா மேலும் தெரிவிக்கையில்,

-தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்புத்தளபதியாக கடமையாற்றிய தனது கணவரான யான் என அழைக்கப்படும் அந்தோனி ராயப்பு என்பவர் முல்லைத்தீவில் வைத்து கடந்த 18-05-2009 அன்று இராணுவத்திடம் சரணடைந்தார்.

-அவர் இராணுவத்திடம் சரணடையும் வரை நான் அவருடன் இருந்தேன். முல்லைத்தீவில் இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கினர். குறித்த அறிவித்தலில் பொது மக்களுடன் வருகை தந்துள்ள புலி உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இராணுவத்திடம் சரணடையுமாறும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

-இந்த நிலையில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் (மைக்கல்) தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியான எனது கணவர் யான் என அழைக்கப்படும் அந்தோனி ராயப்பு உட்பட சுமார் 40 புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

-அவர்களை இராணுவத்தினர் பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்றார்கள். எனது கணவர் சரணடையும் போது அவருக்கு 43 வயதாகும். எனது கணவர் சுமார் 23 வருடங்களாக புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வந்தார்.1983 ஆம் ஆண்டு அவர் விடுதலைப்புலிகளிள் அமைப்பில் இணைந்து கொண்ட நிலையில் 1998 ஆம் ஆண்டு என்னை திருமணம் செய்து கொண்டார்.

-தற்போது எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்ததோடு அகதி முகாம்களுக்குச் சென்று தேடியும் பார்த்தேன்.

-ஆனால் அவரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. தற்போது இரவு நேரத்தில் பெரிய பண்டிவிருச்சானில் உள்ள எனது வீட்டிற்கு மது போதையில் வரும் இனம் தெரியாத நபர்கள் எனது கணவர் தொடர்பாக விசாரிக்கின்றனர்.

எங்களுடைய வீட்டிற்கு வருபவர்களையும் விசாரிக்கின்றனர். நாங்கள் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது எங்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டியின் சாரதிகளை அழைத்து விசாரணை செய்கின்றனர். இதனால் நாங்கள் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுகின்றது.

-இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். நானும் எனது மூன்று பிள்ளைகளுமே வாழ்ந்து வருகின்றோம். பிள்ளைகள் கல்வி கற்று வரும் நிலையில் நாங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளோம்.

-இராணுவத்திடம் சரணடைந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்புத்தளபதியான எனது கணவர் யான் என அழைக்கப்படும் அந்தோனி ராயப்பு உற்பட சுமார் 40 புலி உறுப்பினர்கள் உயிருடன் எங்காவது இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன். எங்களுக்கு அரசின் எந்த உதவிகளும் வேண்டாம். எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள். அல்லது அவரை காட்டுங்கள். தினம் தினம் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றோம்.

-யாழ்ப்பாணத்தில் இவ்வாறான உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படும் போது ஏன் எனது கணவருடன் சரணடைந்த உறுப்பினர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது. இருந்தால் இருக்கின்றார்கள் என கூறுங்கள். அவர்கள் இல்லா விட்டால் இல்லை என்று கூறுங்கள். விசாரணை விசாரணை என எத்தனை விசாரணைகளை மேற்கொள்ளுகின்றீர்கள். படிவங்களை நிரப்பிக் கேட்கின்றீர்கள். ஆனால் அவர் உயிரோடு இருக்கின்றார் என நாங்கள் நம்புகின்றோம். அவரை விடுதலை செய்ய முயற்சி எடுங்கள் என அவர் கண்ணீர் மல்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம,

இவ்விடையம் தொடர்பாக ஆணைக்குழு கவனம் செலுத்தும். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு குழுவை அனுப்புவோம். அந்த நேரம் நீங்கள் அவர்களின் விசாரணைக்கு பூரண ஒத்து வழங்குங்கள். என அவர் தெரிவித்தார்.

 

மூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை பிடித்து சித்திரவதை செய்தது; தாய் சாட்சியம்

எனது 14 வயது மகனை வீட்டில் வைத்து வெள்ளை வானில் கடத்தியவர்கள்  என்னிடம் 20 இலட்சம் ரூபா தருமாறும் இல்லையேல் மகனை சுட்டு பிணமாக வீட்டில் போடுவோம் என்று தொலைபேசியில் சிங்களத்தில் ஒருவர் கேட்டார். அவ்வளவு பணம் எம்மிடம் இல்லை என்று கூறிய சில நாட்களில் 10 வயதுடைய எனது இரண்டாவது மகனும் வீதியில் வைத்து கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார் என தாய் ஒருவர் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளித்தார்.

மடு பிரதேச செயலகத்தில்  தற்போது நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவின் போது தாய் ஒருவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

04.04.2008 ஆம் ஆண்டு அன்று இரவு வீட்டில் இருந்த 14 வயது மகனை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றுவிட்டனர். நாங்கள்  உடனடியாக இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள இராணுவத்திடம் கேட்டோம்  .

ஆனால் அவர்கள்  தாம் பிடிக்கவில்லை என்று கூறினார்கள். பின்னர்  3 நாட்களுக்கு பின்னர் 20  இலட்சம்  தந்தால் மகனை விடுதலை செய்வோம் என்றும் இல்லையேல் மகனை பிணமாக வீட்டில் கொண்டுவந்து போடுவோம் என்றும் சிங்களத்தில் கூறினர்.

எங்களுக்கு சிங்களம் தெரியாது பக்கத்தில் உள்ள வீட்டில் தான்  கொண்டு போய் கொடுத்து விபரத்தை கேட்டோம். அதற்கு எங்களால் முடியாது என்றும் சுட்டுக் கொண்டு வந்து போடுமாறும் கூறினோம்.

அதன்பின்னர் சில நாட்களில் எனது 10 வயது மகன் வீதியால் வந்து கொண்டிருக்கும் போது இராணுவ ரக்கில் வந்தவர்களால் எனது மகன் கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.

மாலை 4 மணியாகியும் வீட்டுக்கு வராதமையால் இலுப்பைகுளத்தில் உள்ள இராணுவ முகாமில் சென்று கேட்கும் போது தாங்கள் பிடிக்கவில்லை என்று கூறி அனுப்பினர். தொடர்ந்தும்  நாங்கள்  குறித்த முகாமிற்கு சென்று கேட்கும் போது பிடித்தவரை அடையாளம் காட்டுமாறு கூறினர்.

அப்போது நாங்கள்  ஒருவரை காட்டினோம். பின்னர் 6 நாட்களின் பின்னர் 10 வயது மகன் கண்கட்டப்பட்ட நிலையில் கை, முகம் போன்ற இடங்களில் பிளேட்ரால் வெட்டி காயப்படுத்தி சித்திரவதை செய்த பின்னர் வீதியில் இறக்கிவிட்டிட்டு போய்விட்டனர்.

அந்தவேளை அண்ணாவை இராணுவம் சுட்டுவிட்டதாக தன்னை வைத்திருந்த முகாமில் கூறினர் என்றும் தன்னை சித்திரவதை செய்தனர் என்றும்  எங்களிடம் கூறினார். ஆனால் எனது மூத்த மகன்  குறித்து எதுவும் தெரியாது . ஆனால் இராணுவம் கடத்தியது என்று நான் உறுதியாக கூறுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

SHARE