மூத்த பிரஜைகள் எமது இனத்தின் கட்டற்ற தகவல் களஞ்சியம்! ஆனந்தன் எம்.பி பெருமிதம்.

421

 

எமது மண்ணின் மூத்த பிரஜைகளின் பட்டறிவு, அநுபவங்களிலிருந்து இன்றுள்ள இளைய சமுகத்தினர் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த அநுபவங்களை முழுமையாக பகிர்ந்து பெற்றுக்கொள்வதன் ஊடாக வீட்டிலும் சமுகத்திலும் இன்று இருக்கக்கூடிய பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காணக்கூடிய வழிமுறைகள் இருந்தும் இன்றைய இளம் தலைமுறையினர் அதில் எந்தளவுக்கு கவனம் செலுத்துகின்றனர் என்பது மிகப்பெரிய வினாவாக எம் முன்பு உள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடந்த 14.12.2014 அன்று நடைபெற்ற மூத்த பிரஜைகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கும் மேலும் தெரிவிக்கையில்,
கூர்மையான அறிவு பெற்றிருந்தபோதும், மனிதப்பண்பு இல்லாதவர்கள் எப்போதுமே மனிதர்களாக மதிக்கப்படமாட்டார்கள். அறிவையும், பண்பையும் கைவரப்பெற்றுள்ள மூத்த பிரஜைகளிடமிருந்து கற்றுக்கொள்ளாமையே இன்று குடும்பங்களுக்குள்ளும் சமுகத்துக்குள்ளும் சமுக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முரண்பாடுகளும் பெருகி வருவதற்கு முக்கியமான காரணமாக அமைகின்றது.
ஆகவே நாம் மூத்த பிரஜைகளிடமிருந்து அவர்களுடைய அநுபவங்களை கற்றுக்கொள்ளும் அதேவேளை அவர்களின் முதுமைக்காலத்தில் உணவு உடை உறைவிடம் சுகாதாரம் இந்த அத்தியாவசிய தேவைகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியான சூழலில் பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு பிரஜைகளினுடையதும் கடமையாகும்.
இன்று இந்த மூத்த பிரஜைகள் தினத்தில் கலந்துகொண்டுள்ள மூத்த பிரஜைகளில் பலர் போர் காரணமாக உங்களுடைய பிள்ளைகளை இந்த நாட்டுக்காக இழந்திருக்கிறீர்கள். இன்னும் பலர் உங்கள் உறவினர்கள் நண்பர்களை இழந்திருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கை காலம் முழுவதும் போர்ச்சூழல், குடும்பச்சுமை பொருளாதார நெருக்கடிகளால் மிகுந்த மன அழுத்தங்களோடு சீவித்திருக்கின்றீர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.
இந்த இழப்புகள் வலிகள் துயரங்களுக்கு எல்லாம் பிரதிஉபகாரமாக உங்களுடைய வாழ்க்கை காலத்துக்குள்ளேயே எமது இனத்துக்கான ஒரு கௌரவமான நிரந்தர அரசியல் தீர்வை கண்டுவிட வேண்டும் என்பதே எங்கள் எல்லோருடைய விருப்பமும் அவாவும் ஆகும். அதற்காகவே உழைத்திருக்கொண்டிருப்பதாகவும் ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.
ஈச்சங்குளம் கிராம மூத்த பிரஜைகள் சங்கத்தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் க.சிவலிங்கம், ஜனாதிபதி இணைப்பாளர் சி.கிஸோர், கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமுக நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர். பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனத்தாரும், நலன்விரும்பிகளும் மூத்த பிரஜைகளுக்கு அன்பளிப்பு பொருள்களை வழங்கி கௌரவித்து சிறப்பித்தனர்.
unnamed (11) unnamed (15) unnamed (16) unnamed (17) unnamed (18) unnamed (19) unnamed (20) unnamed (21)
SHARE