மேற்குலக ஆலோசனையை மதித்தே சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்

387

 

ஈழத்தமிழர்களுடைய தற்போதைய தலைமையை வழிநடத்தும் திரு. இரா. சம்பந்தன் மேற்குலகோ, இந்தியாவோ இலகுவாக அணுகுவதற்கான தலைமையாக பார்க்கப்படுகிறார்.

82 வயதுடைய திரு. இரா.சம்பந்தன் இலங்கையின் சுதந்திரதின விழாவில் கலந்து கொள்ளவதால் அவருக்கு ஏதும் நன்மை ஏற்படப் போவதில்லை. மாறாக அவர் மேற்குலக இராஜதந்திரிகளின் விருப்பை நிறைவேற்றினார்.

இவ்வாறு கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளரான கனடாவில் இருக்கும் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார்.

சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கையின் சனத்தொகையில் 75 வீதமாகவுள்ள சிங்களவர்கள் மத்தியில் ஒரு சிறு நம்பிக்கை துளிர்ப்பதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துப் பரவுவதற்கு சம்பந்தன் வழிவகுத்துள்ளார்.

அவருக்கான எதிர்ப்புக்கள் வட-கிழக்கு மாகாணங்களின் ஒரு பகுதியில் இருந்தே கிளம்புகின்றன. இது ஒட்டுமொத்த வடக்குக் கிழக்கின் கருத்தாகவும் இருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வட-கிழக்கின் ஒட்டுமொத்தப் பலமாக இருப்பதால் அவருக்கு அனைத்து மக்களின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய தேவையுள்ளது.

ஒரு இனம் மீள்தலிற்கான வலியிலுள்ள போது அந்த இனத்தின் தலைவன் தனக்கு ஏற்புடயதைத் துணிச்சலாகச் செய்யும் சமான்யம் மிக்கவனாக இருக்க வேண்டும். அதற்குரிய பண்பை, ஆதிக்கத்தை, அனுபவத்தை வெளிப்படுத்துபவையாகவே திரு.சம்பந்தனின் துணிச்சலான முடிவுகள் இருக்கின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சியும், இதர நான்கு போராட்ட அமைப்புக்களையும் கொண்டது. இது மிகப் பெரிய பலம். ஆனால் கூட்டமைப்புக்கு என்று தனியான யாப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் இன்றும் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுகின்றார்கள் என்பது உள்ளிட்ட பல விடயங்களை திரு. சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.

 

SHARE