மே 18ஆம் திகதிவிசேட பூஜை வழிபாடுகளை நடத்த படையினர் தடைவிதித்துள்ளனர்.

458

 முள்ளிவாய்க்கால் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவஞ்சலி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.குடாநாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களை நடத்துவதற்கு படையினர் தடைவிதித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் பொது இடங்களில் கூடுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் உத்தியோகப்பற்றற்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாளைமறுதினம் மே 18 ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான முயற்சிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஏனைய சில தரப்புக்களும் மேற்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்த படையினர் தடைவிதித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அருகில் உள்ள வைரவர் ஆலயத்திற்குச் சென்ற படையினர் உற்சவத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என கூறியதுடன், மே. 17, 18ஆம் திகதிகளில் பூஜை வழிபாடுகள் எவையும் நடைபெறக் கூடாது எனவும் மிரட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று 3ஆம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன்போது அங்கு சென்ற படையினர் பூஜைகளை தடுக்க முயன்றனர்.

விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நிலைவரங்களை நேரில் அறிந்துகொண்டார். ஆலய வழிபாடு தடுக்கப்பட்ட விடயம் தொடர்பாக யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது விடயத்தை ஆராய்ந்து கூறுவதாக கூறினார்.

SHARE