மைத்திரியிடம் கே.பியை பாதுகாக்குமாறு கூறிய மகிந்த! மர்மம் என்ன? முன்னாள் எம்.பி சந்திரசேகர்

392

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த மஹிந்த, கே.பி ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய நபர் என கூறியிருக்கின்றார். இதன் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளதாகவே மக்களும் நாங்களும் கருதுகிறோம் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
mahinda-and-maithri-21

மேலும் கே.பியிடம் இருந்த சொத்துக்கள், பணம், கப்பல்கள் போன்றவற்றுக்கு என்ன நடந்தது? போன்ற பல கேள்விகள் இந்த நாட்டு மக்களுக்கும் விசேடமாக தமிழ் மக்களுக்கும் உள்ளது.

அதற்காகவே கே.பி கைது செய்யப்பட வேண்டும். என்னும் நிலைப்பாட்டினை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எடுத்திருக்கின்றது. அதற்காக நீதிமன்றில் வழங்கும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது என கட்சியின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த சந்திரசேகரிடம் விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாகவிருந்த கே.பி (குமரன் பத்மநாதன்) கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை ஜே.வி.பி எடுத்தமைக்கான காரணமென்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிரந்தனர்.

அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் உயர் நீதிமன்றில் அந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றார்.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்,

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தனது பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்.

தன் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக்கேட்டுக் கொண்டுள்ளதுடன் கே.பி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் அவர் பாதுகாக்கப்பட வேண்டிய நபர் என குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் தானே தலைவர் என கே.பி அறிவித்திருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரும்போது அஞ்சிக்கொண்டே வந்தேன்.

ஆனால் பின்னர் கோத்தபாய ராஜபக்ஷவை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதன் பின்னர் நான் கூல்டவுண் ஆகிவிட்டேன் என கூறியிருக்கின்றார்.

எனவே கே.பி வசமிருந்த சொத்துக்கள், கப்பல்கள், பணம் ஆகியனவற்றுக்கு என்ன நடந்தது? என்ற சந்தேகம் நாட்டுமக்களுக்கு எழுந்துள்ளது.

இந்தற்கான பதிலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் பல இளைஞர், யுவதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கே.பி மட்டும் எவ்வாறு சுதந்திரமாக நடமாடித் திரிகின்றார்?

எனவே அவர் கைது செய்யப்பட வேண்டும். மக்களிடம் உள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாங்களும் நாட்டு மக்களும் நம்புகிறோம்.

அவர் சுதந்திரமாக நடமாடி திரிவதன் பின்னணியில், பல மர்மங்கள் இருக்கின்றன. எனவே அவர் கைது செய்யப்பட வேண்டும். என நாம் நீதித்துறையிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

மஹிந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படும்: சந்திரசேகர்

மஹிந்த ஆட்சியில் அநீதிகளுக்கும், பழிவாங்கல்களுக்கும் உள்ளானவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கான குழு ஒன்றினை மக்கள் விடுதலை முன்னணி உருவாக்கியிருப்பதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்திருக்கின்றார்.

குறித்த சந்திப்பில் விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

மஹிந்த ஆட்சியில் பழிவாங்கல்களுக்குள்ளானவர்கள், அநீதிகளுக்குள்ளானவர்கள் தொடர்பான தகவல்களை, சேகரிப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணி அநீதிகளுக்கும் பழிவாங்கல்களுக்கும் உள்ளானவர்கள் குறித்த தகவல் அறியும் குழு என்ற குழுவினை உருவாக்கியிருக்கின்றது.

இதில் காணிகளை இழந்திருக்கும் மக்கள், உடமைகள் மற்றும் வியாபார நிலையங்களை இழந்த மக்கள், பழிவாங்கல்களுக்குள்ளான அரசாங்க ஊழியர்கள், தகைமையுள்ள இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டிருந்தல்,

ஊடகவியலாளர்களுடைய பிரச்சினைகள், கொலை செய்யப்பட்டவர்கள் கடத்தப்பட்டவர்கள் காணாமல்போனவர்களுடைய பிரச்சினைகள், மாணவர்களுடைய பிரச்சினைகள், கலைஞர்கள் முகங்கொடுத்த அநீதிகள், விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடுகள், மற்றய துறைகளில் இடம்பெற்ற பழிவாங்கல்கள். என்ற 10வகைப்பாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ள முடியும் என அவர் குறித்த சந்திப்பில் கூறியிருந்தார்.

மேலும் குறித்த முறைப்பாடுகளை தபால் மூலமாக வழங்க முடிந்தால் இல.43கீழ் 20 நுககஹ பிறேஸ் பிலியந்தலை வீதி மகரகம என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலம்.

ஈமெயில் ஊடாக அனுப்ப விரும்பினால் politic sandssrilankagmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம் என என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்தார்.

SHARE