நடைபெற்று முடிந்த 07வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு தொலைபேசி ஊடாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா அவர்கள் தனது கருத்தினை தெரிவிக்கையில், இனவாதப்போக்கில் ஆட்சிசெய்துகொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார். பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சிங்கள மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். தமிழ் மக்களுக்கு எதிரணி வேட்பாளர் எதனையும் வழங்கிவிடக்கூடாது என ஒப்பந்தம் இருக்கின்றது. நாட்டை பிரிக்கப்பார்க்கின்றார்கள். 13 திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றவும் இராணுவத்தினை வெளியேற்றப்போகின்றார்கள் என பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
அவருடைய பிரச்சாரத்திற்கு எதிரணியினர் முகங்கொடுக்கவேண்டியிருந்தது. இவ்வாறாக இருந்தபடியினால்தான் நாங்கள் முற்கூட்டியே எதிரணியுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் எதிரணியினரும் நாங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை வெளியிட்டிருந்தனர். (பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது. மாகாண சபைக்கான அதிகாரங்கள் வழங்கப்படாது, இராணுவத்தினை வெளியேற்ற முடியாது. புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் விசாரணை செய்யப்படும். யுத்தக்குற்றம் தொடர்பில் எவரையும் காட்டிக்கொடுக்கமுடியாது.) இருந்தபோதிலும் மைத்திரிபால சிறிசேன இன்று வெற்றியடைய தமிழ்பேசும் மக்களே, குறிப்பாக வடகிழக்கில் வாழக்கூடிய தமிழ்பேசும் மக்களினாலேயே அவர் வெற்றிபெற்றிருக்கின்றார்.
இது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் உதவியோடு இன்று மைத்திரிபால ஜனாதிபதியாகியுள்ளார். அதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆட்சிமாற்றம் மட்டுமல்ல, ஒரு புதிய சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக்கொண்டு தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு, இனப்பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வினைக்காண்பதுதான் பொறுத்தமாகவிருக்கும் என்ற நம்பிக்கையினை நாங்கள் கொண்டிருக்கின்றோம். மக்களிடத்தில் நாங்கள் ஆட்சிமாற்றம் தேவை என்கிற வேண்டுகோளினை மாத்திரமே விடுத்திருந்தோம். வேறு எந்தவிதமான கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. இந்த 05 வருடத்திலும் மஹிந்த அரசு இராணுவத்தினை குவித்து மேற்கொண்ட நடவடிக்கைகள், நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அந்த இடங்களில் சிங்கள மக்களை குடியேற்றியும், தங்களுடைய அபிவிருத்தி வேலைகளையும் எங்களது சொந்த மண்ணில் நடாத்தி வந்திருக்கின்றார்கள்.
எங்களுடைய சொந்த மண்ணிலிருந்து மக்களை வெளியேற்றி அந்த இடங்களில் சிங்கள மக்களை குடியமர்த்தியுள்ளனர். பௌத்த விகாரைகளை ஆங்காங்கே உருவாக்கி எங்களது கலை, கலாசாரங்களை மாற்றியமைப்பதற்கு பிக்குமார் செயற்பட்டு வந்திருக்கின்றனர். அரசாங்கத்தின் அனுமதியோடு தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்திற்கு முன்னர் வடகிழக்கில் 13 இராணுவ முகாம்கள் மாத்திரமே இருந்தது. இன்று வடகிழக்குப் பகுதிகளில் 01 கிலோ மீற்றருக்கு ஒரு முகாம் என இருக்கின்றது. பெண்களுக்குக் கூட ஒரு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் அகதிகளாக ஒரு இலட்சம் பேர் இருக்கின்றார்கள். வடகிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பினால் அந்தப்பகுதிக்கு குடியேற முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது இந்தியாவில் 125 முகாம்களில் இரு இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கை மக்கள் வாழ்கின்றனர். இங்கு அவர்களுக்கு நிரந்தமான பாதுகாப்பு, நிலங்கள், வேலைவாய்ப்புக்கள் போன்றன இல்லை. எனவே அவர்களுக்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும்.
இராணுவம் இருக்கின்ற இடங்களில் வசித்த மக்களுக்குரிய இடங்களை அவர்கள் வழங்கவேண்டும். இந்த பொதுக்கூட்டமைப்பினர் ஒரு விடயத்தினை குறிப்பிட்டிருக்கின்றனர் அதாவது யுத்தத்தினால் அல்லது இராணுவத்தினரால், அத்துமிறிய சந்தர்ப்பங்களில் காணிகள் இழக்கப்பட்டிருக்குமாயின் அதனை பெற்றுத்தருவதாக தெரிவித்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாது புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை மீளவும் கைதுசெய்து, விசாரணைக்குட்படுத்தி தண்டனைகள் வழங்கப்படப்போவதாகவும் புதிய அரசாங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நீங்கள் எவ்வாறு கையாளப்போகிறீர்கள் எனக்கேட்டகேள்விக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்கள் சுயமாக செயற்படுவதற்கும், வாழ்வாதாரத்தினை மேற்கொள்வதற்கு இந்த புதிய அரசுடன் உரையாடுவதற்கு நாம் தயாராகவிருக்கின்றோம். இப்பொழுது புதிய ஆட்சி மாற்றம், புதிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் நாம் 99வீதமான மக்களை சந்தித்தவேளை கட்சியின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், ஏனையோரின் கருத்தின்படி, ஆட்சிமாற்றம் தேவை என்கின்றதான கருத்தின் அடிப்படையில் தான் நாங்களும் தீர்மானங்களை மேற்கொண்டோம். புதிய அரசில் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்காகவே நாங்கள் ஆதரவினை வழங்கினோம்.
இவ்வாறு தெரிவித்திருந்தபோதிலும்; இந்த விடயத்தினையே நாங்களும் முன்வைக்கின்றோம் என மக்கள் கூறுகிறார்கள். 70 ஆயிரம் மக்கள் தான் யுத்த களத்தில் இருந்தார்கள் என மஹிந்த அரசு கூறியது. ஆனால் உண்மையில் அங்கு 4.5 இலட்சம் மக்கள் இருந்திருக்கின்றார்கள். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மாத்திரம் 3 இலட்சம் பேர் ஆகும். கடந்த தேர்தலில் மஹிந்தவிற்கு வாக்களிக்காமல், நாங்கள் கூறாமலேயே பொன்சேகாவிற்கே மக்கள் வாக்களித்திருந்தனர். இந்த நிலையை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். தற்பொழுது ஒரு ஜனநாயக கட்சியில் இருந்தவர் தான் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பேன் என்று தெரிவித்திருக்கின்றார். 13வது திருத்தச் சட்டத்தில் எவ்வாறு அதிகாரங்களை கையளிப்பது என்பது பற்றியும் அவர் ஆராய்ந்திருக்கின்றார். மக்கள் துல்லியமாக சிந்தித்தே வாக்களித்திருக்கின்றார்கள். எங்களுடைய தரப்பிலுள்ள அனைவரும் மாற்றம் வரவேண்டும் என்றே விரும்பினர். கடந்த ஆட்சியில் பௌத்த, நில ஆக்கிரமிப்பு, இனவழிப்பு என்று தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலமே மக்கள் தாமாகவே முன்வந்து வாக்களித்துள்ளனர். ஆகவே நாங்கள் எந்தவிதமான ஒப்பந்தங்களும் யாரிடமும் மேற்கொண்டோ, மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்த ஆதரவினை மேற்கொள்ளவில்லை. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால அவர்களுடன் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்க செயற்படுவோம் எனவும் கூறினார்.