மைத்திரியின தேர்தல் துண்டுப்பிரசுரத்தில் காணமல்போன ஜெரோமி வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான கவனஈர்ப்பு போராட்டத்தில் கதறும் தாய்
வவுனியாவில் ‘நாங்கள்’ இயக்கம் மற்றும் பிரஜைகள் குழு என்பவற்றின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, நகரசபை மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நாளைய தினம் 67 ஆவது சுதந்திர தினத்தை இலங்கை அரசாங்கம் கொண்டாடவுள்ள நிலையில், ‘நாங்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு,கிழக்கு பகுதியில் காணாமல் போனோரின் உறவுகள் நேற்றும் இன்றும் போராடட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரியும், கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், இன,மத பேதமின்றி மக்கள் மீதும் பிரயோகிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியுமே இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவுடன் இணைந்து ‘நாங்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளை விடுதலை செய்’, ‘நாங்கள் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே’, ‘புதிய அரசே எமது பிள்ளைகளுக்கு பதில் தா’, ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடக இணைப்பாளர் சி.பாஸ்கரா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.