மைத்திரியை ஒன்றரை மணிநேரம் சந்தித்து பேசினார் மகிந்த – மகிந்தவுடன் சந்திப்பா? மறுக்கும் மைத்திரி

160

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு பொதுவான ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

dcp57567573

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டணி கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்வரும் பொது தேர்தலை வெற்றி பெறச் செய்வதற்காகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இணைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முடிவாக இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

20ஆம் திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதா அல்லது அதற்கு முன்னர் கலைப்பதா என்பது தொடர்பில் இச்சந்திப்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சரவை உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மகிந்தவுடன் சந்திப்பா? மறுக்கும் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நேற்று இரவு சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்று இன்று வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்நாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் நேற்று மஹிந்தவுக்கு ஆதரவு வெளியிடும் 87 ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர் அவர்களுடன் பேச்சு நடத்திய மஹிந்த ராஜபக்ச தாம் ஒரு முக்கியமானவரை சந்தித்து விட்டு வருவதாக கூறி சென்று சுமார் 45 நிமிடங்களில் அங்கு திரும்பி வந்துள்ளார்.

இதன்பின்னர் ஆதரவாளர்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு 87 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அழைத்து மஹிந்த கலந்துரையாடியுள்ளார்.

எனினும் இதன்போது பேசப்பட்ட விடயம் குறித்த தகவல் எவையும் வெளியாகவில்லை. இதற்கிடையிலேயே குறித்த 45 நிமிட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன இருப்பினும் இந்த செய்தியை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.

SHARE