எதிர்வரும் 26ம் திகதி, திங்கட்கிழமை இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பெரும்பாலும் கலந்து கொள்வார் என கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு புதுடெல்லியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
அயல் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அயல்நாட்டுடன் எப்போதுமே சுமுக உறவை விரும்பும் இலங்கை, அந்த உறவையும் நட்பையும் பலப்படுத்துவதையே விரும்புகிறது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுவதன் மூலம் இந்தியாவின் புதிய ஆட்சிப் பீடத்துடன் ஒரு நெருக்கமான உறவைத் தொடர்வதற்கும், இருதரப்பு ஊடாட்டத்தைப் பலப்படுத்துவதற்கு முடியும் என கொழும்பு கருதுகின்றது என இவ்விடயங்களுடன் சம்பந்தப்பட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்களன்று மாலையில் புதுடெல்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகின்றது.
தற்சமயம் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி, அங்கிருந்து திரும்பிய பின்னர், புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் பங்குபற்றுவதற்காகப் புதுடெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுமாறு இலங்கை உட்பட அனைத்துத் தென்னாசிய நாடுகளின் தலைவர்களுக்கும் புதுடெல்லி அழைப்பு அனுப்பியிருப்பதாக அறியவந்திருக்கிறது.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பாகிஸ்தான் பிரதமர் அதில் கலந்து கொள்வாரா என்று இதுவரை தகவல்கள் ஏதும் இல்லை.