யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுசித்திரா துரைக்கும் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவிற்கும் இடையிலான கலந்துரையாடல்

576

புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையினை இந்தியா ஆதரிக்கின்றதாகக் கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானதென இந்தியாவின் இலங்கை, மாலைதீவிற்கான இணைச் செயலாளர் சுசித்ரா துரை தெரிவித்ததாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுசித்திரா துரைக்கும் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்; போதே சிவஞானம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிநபர்கள் அமைப்புக்கள் மீதான தடையினை ஆதரிக்கும் நடவடிக்கையினை இந்தியா மேற்கொள்ளவில்லையென்றும் அதற்கான தேவை மத்திய அரசிற்கு இல்லையெனவும் சுசித்திரா கூறியிருந்தார்.

வடக்கில் இராணுவத்தினர் அதிகம் இருப்பதாகவும், வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினாலேயே இங்குள்ள மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவ்விடங்களில் மீளக்குடியமர முடியும் என மாவை எடுத்துக் கூறியிருந்தார். அதற்கு தானும் கண்ணூடாகப் பார்ப்பதாக மட்டும் அவர் பதிலளித்திருந்தார்.

அத்துடன், இந்திய வீட்டுத்திட்டத்தில் குளறுபடிகள் இடம்பெறுவதுடன், விரைவாகச் செய்ய வேண்டிய வீட்டுத்திட்ட வேலைகள் இழுத்தடிக்கப்படுகின்றதாகவும் எடுத்துரைத்திருந்தோம். அதனை தானும் அறிந்ததாகவும், அதற்கு இங்கிருக்கின்ற அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட வடமாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை. இந்தியாவில் இருப்பதினைப் போன்று மாநில மத்திய அரசு உருவாக்கப்படவில்லையெனத் தெரிவித்த போது, அது தொடர்பாக தான் நன்றாக உணர்கின்றதாகவும் சுசித்திரா தெரிவித்ததாக சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

 

SHARE