யாழ்ப்பாணத்திலும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர் சமூகம் சீரழிகின்றது.- நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்

485
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்கள் பாரியளவில் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திலும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர் சமூகம் சீரழிகின்றது.-

போதைப் பொருள் மற்றும் மதுபான பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சுங்கத் திணைக்களம் இதுபற்றி எவ்வாறு பேசினாலும், நாட்டுக்கள் சட்டவிரோதமாக போதைப் பொருள் கொண்டு வரப்படுவதனை மறுப்பதற்கில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்டங்களிலிருந்து வடக்கிற்கு கொண்டு வரப்படும் கள்ளு வகைகள் சுகாதாரத்திற்கு உகந்தவையல்ல. இவை செயற்கையாகவே தயாரிக்கப்படுகின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜெயலலிதா தூரநோக்குடைய ஓர் தலைவியாவார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் கவனம் செலுத்துகின்றார்.

இலங்கை பாராளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பா.உறுப்பினர் சி.சிறீதரன் யாழ்ப்பாணத் தொழிலாளர்களின் சமகால பிரச்சினைகளில் ஒன்றான திக்கம் வடிசாலை தொடர்பாக விரிவான உரையொன்றை ஆற்றியுள்ளார்.

அவர் ஆற்றிய உரையின் விபரம் வருமாறு,

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கில் போதைவஸ்து பாவனை அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவை இளைய சமுதாயத்தைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்கின்றன.

ஆனால் இந்த நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்ற பல்வேறு விதமான பொருட்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து மதுபான போத்தல்களும் போதை தரக்கூடிய உற்பத்திப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்ற அதேநேரம் இலங்கையில் சுதேசிகளுடைய – பூர்வீகக் குடிமக்களுடைய – சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள திக்கம் வடிசாலையானது வரையறுக்கப்பட்ட பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணியின்கீழ் இயங்கும்
JP2153 என்னும் பதிவிலக்கத்தைக் கொண்ட ஒரு பாரிய வடிசாலையாகும்.

இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வடிசாலையை நம்பி தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த தொழிற்சாலையிலே ஐந்தரைக் கோடி ரூபாய் – 55 மில்லியன் ரூபாய் – பெறுமதியான எதனோல் என்று சொல்லப்படுகின்ற spirit இப்பொழுதும் கையிருப்பில் இருக்கின்றது.

இந்த நிலையில் தங்களுடைய இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி மரமேறி உழைத்த அவர்களது உழைப்பினூடாக உரிய பலனை அடைய முடியாமல் அந்தத் தொழிலாளர்கள் திணறுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக்குக்கூட இது பெரிதாகப் பயன்படவில்லை என்பதுதான் மிகமிக மனவருத்தமான விடயம்.

இருபதாயிரம் தொழிலாளர்கள் நம்பியிருக்கின்ற இந்த திக்கம் வடிசாலையைத் தனியாரின் கையில் கொடுப்பதற்கான முழு முயற்சிகளும் இன்று மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் காலங்காலமாக அந்த மண்ணிலே வாழ்ந்த தமிழ்த் தேசிய சுதேசிகளுடைய உழைப்பு நிர்மூலமாக்கப்படவிருக்கிறது.

குறிப்பாக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஓர் அமைச்சர்தான் மூலகாரணமாக இருந்து அந்த திக்கம் வடிசாலையைத் தனியாரின் கையில் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என தெரிவித்த பா.உறுப்பினர் சி.சிறீதரன்,

இப்பொழுது வடக்கு கிழக்கு பகுதிகளுக்கெல்லாம் போத்தல்களிலே அடைக்கப்பட்ட கள்ளு தாராளமாக தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்படுகின்றது. அண்மைய பத்திரிகைச் செய்திகளின்படி யாழ்ப்பாணத்திலே இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி சதைத்துண்டங்கள் கிழியக்கிழிய மரமேறி உழைத்த அந்தத் தொழிலாளர்களுடைய கள்ளு தெருவிலே ஊற்றப்படுகின்றது.

இவ்வாறாக மரத்திலிருந்து இயற்கையாக எடுக்கப்படுகின்ற ஆரோக்கியமுள்ள ஒரு பானம் தெருவிலே ஊற்றப்படுகின்ற அதேநேரம் இலங்கையின் தென்பகுதியிலிருந்து போத்தல்களிலே அடைக்கப்பட்ட இரசாயனக்கள்ளு அந்த மக்களைச் சென்றடைகின்றது.

அண்மையில் போத்தல்களிலே அடைக்கப்பட்ட இரசாயனக் கள்ளைப் பாவித்த இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மரணம் சம்பவிக்கக்கூடிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாண வைத்தியசாலையில் அவர்களுடைய உடல்களிலிருந்து லீற்றர் கணக்கிலே இரசாயனப் பதார்த்தங்களை எடுத்திருக்கிறார்கள்.

இது அந்த மண்ணிலே பாரிய பாதிப்பைக் கொடுத்திருக்கிறது. ஆகவே, அந்த தொழிலாளர்களுடைய நலன்களைக் கருத்திற்கொண்டு கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக கிடப்பிலே இருக்கின்ற அந்த திக்கம் வடிசாலையின் எதனோலை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும்.

அங்கு கொண்டு வரப்படுகின்ற போத்தல்களில் அடைக்கப்பட்ட கள்ளினை விடுத்து அங்கு பெறப்படும் கள்ளின்மூலம் அந்த எதனோல் உற்பத்தியைத் தொடர்ந்தும் மேற்கொண்டு திக்கம் தொழிற்சாலை- அந்த மண்ணுக்குரிய- அந்த தொழிலாளர்களுக்குரிய தொழிற்சாலையாக மாற்றப்பட வேண்டும்.

அதற்கு இந்த அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சும் கூடுதலான முயற்சி எடுக்கவேண்டும் என்பதைத்தான் நான் இந்த இடத்திலே குறிப்பிட விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஒருபுறம் அந்த தொழிலாளர்களுடைய தொழில் பாதிக்கப்படுகின்றது. அவர்களுடைய கள்ளு தெருவிலே ஊற்றப்படுகின்றது. மறுபுறம் தென்பகுதியிலிருந்து இரசாயனக் கள்ளு போத்தல்களிலே அடைக்கப்பட்டு அங்கு கொண்டுசெல்லப்படுவதால் பல நூற்றுக்கணக்கானவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.

இயற்கையான பானத்தை விட்டுவிட்டு மது என்ற அடிப்படையில் செயற்கையான பானத்தை அவர்கள் அருந்துகின்றபொழுது அது அவர்களை மரணத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்கின்றது.

கடந்த நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக அந்த தொழிலைச் செய்து தங்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றிய அந்த தொழிலாளர்கள் இன்று நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இந்தத் திக்கம் வடிசாலையானது 1970களில் இலங்கையிலிருந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டதாகும்.

அதன் பிற்பாடு திரு. நடராஜா என்கின்ற பனை வள தொழில்நுட்ப வல்லுநருடைய முயற்சியினால் அது பாரிய வளர்ச்சியைக் கண்டது. அதன்பிற்பாடு திக்கம் வடிசாலையினுடைய கோடிக் கணக்கான ரூபாய்கள் சில அரசியல்வாதிகளுடைய அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதே தவிர அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுடைய குடும்பங்களுக்கோ அல்லது அப்பிரதேச மக்களுடைய நலனுக்கோ பயன்படுத்தப்படவில்லை.

இவ்விடயமானது சுங்கத்தோடு தொடர்புடைய ஒரு விடயம்! மதுவோடு தொடர்புடைய ஒரு விடயம்! வரி விதிப்போடு தொடர்புடைய ஒரு விடயம்.

இலங்கையில் தென்பகுதியிலே உற்பத்தி செய்யப்படுகின்ற சாராயத்துக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகின்றதோ அதேபோலதான் வடக்கிலுள்ள பன தென்னை வளக் கூட்டுறவுச் சங்கத்தினூடாக நடாத்தப்படுகின்ற திக்கம் வடிசாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற சாராயத்துக்கும் வரி விதிக்கப்படுகின்றது.

இவ்வரி அறவீடானது அவர்களுடைய தொழில்நுட்பம் மற்றும் அவர்களிடமிருக்கின்ற பொருட்களைக் கொள்வனவு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் பாதகமான நிலையை உண்டாக்கியிருக்கின்றது.

எனவே அவர்களுக்கு விதிக்கப்படுகின்ற வரி மாற்றப்பட வேண்டும் அல்லது உரிய அமைச்சானது அவர்களுடைய எதனோலைக் கொள்வனவு செய்து 55 மில்லியன் ரூபாவை அவர்களுக்கு வழங்கி, அதன்மூலம் திக்கம் வடிசாலையை புனரமைத்து அதனை ஒரு பிரமாண்டமான தொழிற்சாலையாக மாற்றி பரம்பரை சுதேசத் தமிழர்களுடைய தொழிலை மிளிரச் செய்ய வேண்டும்.

அதனைவிட இந்தப் பனை தென்னை வள பானங்களிலிருந்து கருப்பனி அல்லது இனிப்புப் பண்டங்கள், குளிர்பானங்களை உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. எனவே, அதற்கான முறைகளைக்கூட மாற்ற முடியும். இன்று இத்தொழிற்சாலையில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் பாரிய அளவிலே பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்டிருக்கின்ற இந்தத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் – மாற்றம் கிடைக்கவேண்டும். இந்த திக்கம் வடிசாலையானது வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஓர் அமைச்சரின் சகோதரருடைய கம்பனிக்கோ அல்லது தனிப்பட்ட நபர்களுக்கோ செல்லாமல் மக்களுடைய சொத்தாக மாறவேண்டும்.

அதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் ஏற்கெனவே பல முறைகள் இவ்வடிசாலை தொடர்பான பல பிரச்சினைகள் பல அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுதுகூட பேசப்படுகின்ற பொருளாக மாறி இருக்கின்றது.

இது பனை அபிவிருத்திச் சபை என்பதற்கு அப்பால் ஒரு சமாசம்!

யாழ். மாவட்டத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம், அரியாலை, கோப்பாய், ஊர்காவற்றுறை, வேலனை, அனலைதீவு கோண்டாவில், மாணிப்பாய், சுன்னாகம், தெல்லிப்பளை, சங்காணை, பண்டத்தறிப்பு, காரைநகர், பருத்தித்துறை, கரவெட்டி, அச்சுவேலி, சாவகச்சேரி, கொடிகாமம், மருதங்கேணி, நெடுந்தீவு போன்ற பனை தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களும்

வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி போன்ற கொத்தனிகளும் சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கமும் பனை தென்னை அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களுடைய சமாசமும் மிக ஒழுங்காகவும் செம்மையாகவும் இயங்கி வருகின்றன.

இவை ஒரு கூட்டுறவுக்குக் கீழ் செம்மையாக இயங்குகின்றபொழுது அதனைப் புறந்தள்ளி வைத்துவிட்டு ஒரு தனிநபர் சூறையாட நினைப்பதையும் ஒரு தனிநபர் தன்னுடைய குடும்ப நலன்களுக்காக இந்தப் பரம்பரை – பாரம்பரிய தமிழர்களுடைய சொத்தை அழிக்க முனைவதையும் இந்தச் சபை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

நான் இச்சபையினூடாக குறிப்பிட்ட அமைச்சர் அவர்களுடைய கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வருகின்றேன். திக்கம் வடிசாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற எதனோலைக் கொள்வனவு செய்வதன் மூலம் அந்த தொழிலாளர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையே நான் இந்த இடத்திலே வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன்.

மிக முக்கியமாக அங்கு பணிபுரியும் 20000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் பற்றிய கனவும் பனைவள தொழில்நுட்ப வல்லுநர் நடராஜா அவர்களுடைய கனவும் இன்னும் எத்தனையோ குடும்பங்களுடைய கனவுகளும் இதிலே தங்கியிருக்கின்றன.

நாங்கள் அந்தக் கனவுகளை நிறைவேற்றி அவர்களுடைய குடும்பங்களில் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய வகையில் இந்த திக்கம் வடிசாலையை புனரமைக்க வேண்டு்ம் என்பதையே நான் இந்த இடத்திலே குறிப்பிட விரும்புகின்றேன் என பா.உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்தார்.

 

SHARE