யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடத்தொகுதி திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்விலே வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் , சுகாதார அமைச்சின் அதிகாரிகள் , பொதுமக்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இவ் வைத்தியசாலையானது 1951ம் ஆண்டளவிலே ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான சேவையை வழங்கிவந்தது. இப்பிரதேச மக்கள் மட்டுமல்லாது எழுவைதீவு , நயினா தீவு ஆகிய பிரதேச மக்களும் இங்கு சிகிச்சைப் பலனைப்பெற்றனர். பின்னர் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த பிரதேச மக்கள் தம் சொந்த மண்ணை விட்டு வெவ்வேறு பிரதேசங்களில் குடியேறினர். இருப்பினும் தற்போது மக்கள் தம் சொந்த இடங்களில் மீண்டும் குடியேறிவரும் இந்த சந்தர்ப்பத்தில் கனடா வாழ் அனலைதீவு புலம்பெயர் உறவுகள் அனலைதீவு கலாச்சார ஒன்றியம் எனும் அமைப்பின் ஊடாக தம் சொந்த மண்ணிற்கு பயன்பெறும் வகையிலே சுகாதரா அமைச்சுடன் தொடர்புகொண்டு இந்த கட்டடத் தொகுதியை வழங்கியுள்ளனர்
. தற்போது எம் புலம்பெயர் உறவுகள் பலர் எம் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் கல்வி, சுகாதாரம் , வாழ்வாதாரம் போன்ற தேவைகளை அந்தந்த அமைச்சுக்களிடம் தொடர்புகொண்டு தம் சேவைகளை வழங்கிவருகின்றனர். நலிவுற்ற எம் மக்களிற்கு இவ்வாறான சேவையே தேவைப்படுவதால் வடக்கு மாகாண மக்கள் சார்பிலே இந்த உறவுகளிற்கு எம் உளமார்ந்த நன்றிகள்.