யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையை பூர்வீகமாக கொண்ட செல்வன் இராசகுலேந்திரன் துளசிராம் நேற்றைய தினம் தனது இரண்டாவது பிறந்தநாளையொட்டி 42 குடும்பங்களுக்கு தற்காலிக வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளார்.
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னெடுப்பில் தாயகத்தில் செயற்படுத்தப்பட்டுவரும் வாழ்வோம்-வளம்பெறுவோம் செயற்திட்டத்தில் இணைந்தே மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
முல்லைத்தீவு.வலைஞன்மடம், அம்பலவன் பொக்கணை மற்றும் மாத்தளன் ஆகிய கிராமங்களில் உள்ள பெண்தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான தற்காலிக வாழ்வாதார உதவியாக தலா பத்து(10) கிலோ அரிசி வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கைச்சேர்ந்த இராசகுலேந்திரன்-தர்சினி ஆகியோரின் மகன் செல்வன் இரா.துளசிராம் அவர்களின் இரண்டாவது பிறந்ததினம் நேற்று நடைபெற்றிருந்தது.
இந்நாளில் தமது மகனின் சார்பாக ஈழத்தில் வறுமையில் வாடும் தமிழ் உறவுகளின் பசிப்பிணி போக்கும் விதத்தில் வாழ்வோம்-வளம்பெறுவோம் செயற்திட்டத்தில் இணைந்த அவரது பெற்றோர்இ 42 குடும்பங்களுக்குமான தற்காலிக வாழ்வாதார உதவிகளுக்கான நிதியினை வழங்கியதோடு மேற்படி செயற்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தினை தமது மகனின் பிறந்தநாள் அன்றே செயற்படுத்துமாறு கோரியிருந்தனர்.
அந்தவகையில் 2015-03-12 அன்று மாத்தளன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மாத்தளன் இ அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞன்மடம் ஆகிய பகுதிகளில் இருந்த 42 பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
உள்வாங்கப்பட்டவர்களுக்கு தலா பத்து கிலோ அரிசிவழங்கப்பட்ட இந்நிகழ்வில் மாத்தளன் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் திரு.அருள்தீபன், அம்பவலவன் பொக்கணை கடற்தொழிலாளர் சங்கத்தலைவர் மதன், வலைஞன்மடம கடற்தொழில் சங்கச்செயலாளர், மாத்தளன் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவி மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள்,
“வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்திட்டத்தின் கடைசி இரு கட்டங்களும் சிறுவர்களின் பிறந்தநாளையொட்டி அவர்களின் பெற்றோரால் வழங்கப்பட்ட நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகிறது.
ஈழத்தமிழர் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் வாழ்வாதார முயற்சிக்கான உதவிகளை வழங்கும் செயன்முறைக்கு சமாந்தரமாக தற்காலிக வாழ்வாதார உதவிச்செயன்முறையாக இவ்வாறு புலம்பெயர் உறவுகளின் கைகொடுப்பில் பசிப்பிணி போக்கும் அரிசி வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
போராட்டத்திற்காய் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று தமது பிள்ளைகளை பறிகொடுத்து உழைக்கும் வலுவற்று தினம் தினம் தம் நாளாந்த வாழ்வுக்காய் போராடிக்கொண்டிருக்கும் தாய் தந்தையரை அரவணைப்பதற்கும் கணவனை இழந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாயும் கொண்டிருக்கும் பெண்தலைமைத்துவ குடும்பங்களையும் மெல்ல மெல்ல கரைசேர்க்கும் முயற்சியிலேயே இந்த அரிசி வழங்கும் செயற்திட்டத்தை தற்காலிக வாழ்வாதார உதவித்திட்டமாக தாயகத்தில் முன்னெடுத்து வருகிறோம்.
இதுவரையில் 159 குடும்பங்களை மூன்று கட்டங்கள் மூலம் உள்வாங்கியிருக்கிறோம். தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களையும் புலம்பெயர் ஈழத்தமிழ் உறவுகளையும் இணைக்கும் விதமாய் இச்செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டவண்ணமே இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்