யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியுமே இந்தப் போராட்டம்

313

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு மானிப்பாய் பகுதியில் இசைநிகழ்ச்சியொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேரை மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் மாணவர்கள் மீது சரமாரியாக வாள்வீச்சை மேற்கொண்டு மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சிலர் ஓடிவிடவே 3 மாணவர்கள் சரமாரியான வாள்வீச்சுக்கு இலக்காகினர். அதில் கலைப்பீடத்தில், இரண்டாம் வருடத்தில் கல்விகற்கும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் என்ற மாணவனின் கை துண்டானது. அதே பீடத்தில் கற்கும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த றஜீபன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபதர்சன் ஆகியோர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

வெட்டுக்காயங்களினால் விழுந்த மாணவன் ஒருவனுக்கு அருகில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், காயப்பட்ட மாணவனின் தலைக்கவசத்தை கழற்றும்படி கோரியிருக்கின்றார். பயப்பீதியிலும், இரத்தப்பெருக்கிலும் கிடந்த மாணவன் தலைக்கவசத்தைக் கழற்றவே, தாம் வெட்டுவதற்கு வந்த நபர்கள் இவர்களில்லை எனத் தெரிவித்துவிட்டு இனந்தெரியாத நபர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டனர்.

இதன்பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த பல்கலைக்கழக நண்பர்கள், காயப்பட்ட மாணவர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். கை துண்டிக்கப்பட்ட முரளிதரன் என்ற மாணவன் கொழும்பு வைத்தியசாலையிலும், ஜெபதர்சன், றஜீபன் ஆகிய இரு மாணவர்களும் யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அதேபோல கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக, அதிகாலை வேளையில் ஊடகவியலாளர் ஒருவருடன் சேர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அயல்வீட்டுக்காரருடன் முரண்பட்டனர் என்ற காரணத்தினாலேயே குறித்த கைதுகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டன.

ஆனால் மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இருவேறு சம்பவங்கள் குறித்தும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகமோ, பொலிஸ்தரப்போ எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்தே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது, வாள்வெட்டை நடத்திய இனந்தெரியாத நபர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் விடுதலைசெய்யப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரியிருந்தனர். அதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்திருக்கின்றனர்.

SHARE