யாழ்.இந்துக்கல்லூரி, இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரிகளில் தொழில் நுட்ப ஆய்வுகூடங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு 13.10.2014 – திங்கட்கிழமையாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.
மேற்படி நிகழ்வுகள் அந்தந்தப் பாடசாலைகளில் இன்றைய தினம் (13) இடம்பெற்றன.முன்பதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் பாடசாலை சமூகத்தால் வரவேற்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.இதன்போது கல்லூரி அதிபரால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.இதேபோன்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் கல்லூரி சமூகத்தால் வரவேற்கப்பட்டதையடுத்து மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.இதோபோன்று நெல்லியடி மத்திய கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய ஆய்வுகூடத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.வடமாகாணத்தில் 90 பாடசாலைகள் இத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் நேற்றைய தினம் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் யாழ்.மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்தநிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட கல்விப்புலம் சார்ந்த அதிகாரிகள் பாடசாலை சமூகம் எனப் பலரும் கலந்து கொண்டனர்.