யாழ்.குடாநாட்டில் ஆட்கள் அற்ற வேவு விமானம் மீட்பு

530

 யாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் மேற்கூரையில் இருந்து நேற்று (02) மாலை சிறிய ரக மர்ம விமானம் ஒன்று காணப்பட்டது.

அதனை அடுத்து விடுதி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விமானத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்கவிடம் கேட்ட போது,

நேற்றைய தினம் பொலிசாரால் மீட்கப்பட்ட சிறியரக விமானமானது தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படுத்தளுக்காக பயன்படுத்தப்பட்ட விமானமாகும்.

இந்த நிறுவனம் மொனராகலை, தம்புள்ளை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

இதேபோல யாழ்ப்பாணத்திலும் அவர்கள் விளம்பர நடவடிக்கையை மேற்கொள்ளும் போதே அதற்குரிய மின்சக்தி (பற்றரி சார்ஜ்) போதியதாக இல்லாமல் அது விடுதியின் மேல் விழுந்துள்ளது

அந்த விமானம் 100 மீற்றர் தூரத்திற்கு பறக்க கூடியதாகும் இந்த விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியினையும் அவர்கள் பெற்று இருக்கின்றனர்.

அதற்குரிய அனுமதிக் கடிதங்களை எமக்கு காட்டியதுடன் குறித்த விமானத்தின் அடையாளத்தையும் எமக்கு கூறியதை அடுத்து அந்த சிறிய ரக விமானத்தை உரியவர்களிடம் கையளித்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த விமானம் வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் அது திடீரென செயலிழந்து விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிபிடத்தக்கது.

யாழ்.குடாநாட்டில் வேவு நடவடிக்கைகளினில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்கள் அற்ற வேவு விமானமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றின் மேற் கூரையினிலிருந்து மீட்கப்பட்ட அந்த விமானம் தற்போது யாழ்.பொலிஸார் வசமுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது எந்த நாட்டினது வேவு விமானமென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் இது இலங்கை விமானப்படைக்கு சொந்தமானதென்ற தகவல்கள் ஏதும் கிட்டியிருக்கவில்லை.
விடுதி நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே இது மீட்கப்பட்டதாக மேலும் தெரியவருகின்றது. வேவு நடவடிக்கைகளிற்கு பயன்படுத்த குறித்த வேவு விமானம் செயலிழந்து கீழே வீழ்ந்திருக்கலாமென நம்பப்படுகின்றது. தயாரிப்பு வகைகள் அடிப்படையில் இது சீன நாட்டினதாக இருக்கலாமென மற்றொரு தகவல் கூறுகின்றது. மேலதிக தகவல்களிற்காக இலங்கை விமானப்படையினது உதவி நாடப்பட்டுள்ளதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது.

 

SHARE