யாழிற்கான புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு 11.10.2014 – சனிக்கிழமையாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான குழுவினர் நேரில் ஆராய்ந்து கொண்டனர்.
பளை புகையிரத நிலையத்திற்கு இன்றைய தினம் (11) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தலைமையிலான குழுவில் போக்குவரத்து பிரதியமைச்சர் றோகண திஸநாயக்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் உள்ளிட்டோர் நேரில் ஆராய்ந்தனர்.இதன்பிரகாரம் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்துக்கான சேவை ஜனாதிபதி அவர்களால் உத்தியோகபூர்வமாக பளையிலிருந்து ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில பரீட்சார்த்தமாக பளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்த யாழ்.தேவி புகையிரதத்தில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பயணம் செய்தனர். இதன்போது நவீன வசதிகளைக் கொண்டமைந்த வகையில் கொடிகாமம் மற்றும் நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய புகையிரத நிலையங்களையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணம் வந்த இக்குழுவினர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ். புகையிரத நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடர்பாக துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டனர்.இதில் ஜனாதிபதியின் இந்துசமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் பாபுசர்மா யாழ். மாநகரசபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, புகையிரத நிலைய அதிகாரிகள் மற்றும் இந்திய ஐகோன் நிறுவன அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.