யாழ். நீதிமன்ற சூழலில் அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான 129 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். புங்குடுதீவு மாணவியின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுப் புதன்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற கட்டடத் தொகுதியை தாக்கியிருந்தனர்.
இதன்போது 129 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். நீதிமன்றினால் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் இடமில்லாததால் அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு 8 மணியளவில் அவர்கள் சிறைச்சாலை வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுராதபுரம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விடயம் குறித்து அறிந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிறைச்சாலையின் முன் கூடி கதறி அழுதனர். இதனால் சிறைச்சாலை சூழலில் பெரும் சோகம் நிலவியது.