யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

392

 

யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை 9 மணிமுதல் வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. நாளை 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். யாழ். மாவட்டத்தில் 526 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, 36 பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களும் 8 தபால் மூலமான வாக்குகள் எண்ணும் நிலையங்களும் என மொத்தமாக 44 வாக்கெண்ணும் நிலையங்கள் செயற்படவுள்ளன. வவுனியாவில்… வவுனியா மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளடங்கலாக ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 705 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 134 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 15 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 15 வாக்கு எண்ணும் நிலையங்களில் 9 நிலையங்களில் சாதாரண வாக்குகளும் 6 நிலையங்களில் தபால்மூல வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. வாக்களிப்பு நிலையங்களுக்காக வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 35 பாடசாலைகளும், வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 62 பாடசாலைகளும் பயன்படுத்தப்படவுள்ளது. மட்டக்களப்பில்… மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய 3 தேர்தல் தொகுதிகளிலும் 3 லட்சத்து 65 ஆயிரத்து 167 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி கல்குடா தொகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 55 பேரும் மட்டக்களப்பு தொகுதியில் ஒரு லட்சத்து 72ஆயிரத்து 497 பேரும், பட்டிருப்பு தொகுதியில் 87 ஆயிரத்து 611 பேரும் தகுதி பெற்றுள்ளனர். 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் கல்குடாவில் 115 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு தொகுதியில் 119 நிலையங்களும் பட்டிருப்பு தொகுதியில் 100 நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 28 வாக்கெண்ணும் நிலையங்கள், தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 5 நிலையங்களும் என மொத்தமாக 33 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னாரில்… ஜனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 232 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 70 வாக்கு சாவடிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் எண்ணப்படவிருப்பதாகவும் ஏனைய வாக்கு பெட்டிகள் மன்னார் மாவட்ட செயலகத்தில் 6 நிலையங்களில் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE