யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

404
 jaffna_sippai_4

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படை வீரர் இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான எம். கே. சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் ஆகியோர், இதுபோன்ற அராஜகங்களைத் தடுப்பதற்கு மக்கள் குடியிப்புகளுக்கு நடுவிலுள்ள இராணுவம் மற்றும் கடற்படை முகாம்களை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற முனைப்புக்கள் தொடருமாயின் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக பிரதேச ரீதியாக தொண்டர் படைகளை உருவாக்க வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படைவீரர் நேற்று அதிகாலை அத்துமீறி உட்பிரவேசித்தமை தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று நேரடியாக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த இரு மாகாண சபை உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணி என்ற இடத்தில் பரமேஸ்வரா பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள கடற்படை முகாமில் கடமையாற்றுகின்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் அருகிலுள்ள வீடொன்றிற்குள் நேற்று அதிகாலை அத்துமீறி உட்பிரவேசித்துள்ளார். இவர் அவ் வீட்டில் வசித்த இரு பிள்ளைகளின் தாயாருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டுள்ளார்.

குறித்த தாயார் எழுப்பிய கூக்குரலில் விழிப்படைந்த அயலவர்களின் உதவியுடன் இக்கடற்படைச் சிப்பாய் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படடுள்ளார்.

அண்மையில் கடற்படையினர் காரைநகர் பகுதியிலும் இதுபோன்ற முறைகேடான செயல்களைச் செய்துள்ளனர்.

கடற்படையின் இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன.

இதுபோன்ற சம்பவங்கள் தொடருமாயின் எமது இளைஞர்களை ஒன்றிணைத்து தொண்டர்படைகளை உருவாக்க வேண்டிய சூழல் எமக்கு ஏற்படலாம்.

எனவே இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள இராணுவ, கடற்படை, விமானப்படை முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்புபட்ட செய்தி

தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படை சிப்பாயை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைப்பு!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அந்தச் சிப்பாயை பொலிஸார் இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தினர்.

சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விநாயகபுரம் பகுதியில் அதிகாலை வேளை ஒருவர் வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் இதனை அவதானித்த அந்தப் பெண்ணின் கணவர் அந்த நபரைப் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.

வீட்டாரின் அலறலைக் கேட்டு அயலவர்கள் விழித்துக் கொண்டு ஒன்றுகூடி குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இது குறித்து பரமேஸ்வரா பள்ளிக்கு அருகிலுள்ள இராணுவ முகாமுக்கும் பளைப் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த நபர் கடற்படையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தினர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

எனினும், அந்த நபரை தாம் பொலிஸாரிடம் ஒப்படைப்போம் எனக் கூறிய பொதுமக்கள் பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் குறித்த சிப்பாய் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற சிவாஜிலிங்கம் மற்றும் சுகிர்தன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்ததுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சமூகமட்ட விழிப்புனர்வு குழுக்களை அமைத்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கடற்படைச் சிப்பாய்க்கு விளக்கமறியல்

யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதி வீடொன்றுக்குள் புகுந்த கடற்படை சிப்பாய் 22 வயதான குடும்பப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது, அந்தப் பெண் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அயல் வீட்டார்கள் ஓடி வந்து குறித்த கடற்படைச் சிப்பாயை பிடித்து தாக்கியுள்ளனர்.

பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிடம் கடற்படைச் சிப்பாயை ஒப்படைத்துள்ளனர்.

பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான சிப்பாயை பளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் குறித்த சிப்பாய் ஆஜர்படுத்தப்பட்டதும், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

SHARE