யுவராஜ் விளாசல்; பெங்களூரு வெற்றி

611

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் சிறிது தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் இந்த முறையும் தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் 2 சிக்ஸர்களின் உதவியுடன் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் விராட் கோலி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 10 ரன்கள் எடுத்திருந்தார். நிதானமாக ஆடி வந்த பார்த்திவ் படேல் 29 ரன்களிலும், டி வில்லியர்ஸ் 33 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். சச்சின் ரணாவுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

இம்ரான் தாஹிர் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்களும், மொஹித் சர்மா வீசிய 18-வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரும் பறக்க விட்டார். ராகுல் சுக்லா வீசிய கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த யுவராஜ் சிங் நாலாபுறமும் நான்கு சிக்ஸர்களை வெளுத்துக் கட்ட அணியின் ஸ்கோரும் அவரது ஸ்கோரும் விறுவிறுவென உயர்ந்தது.

20 ஓவரில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. யுவராஜ் சிங் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

சவலான இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முரளிதரன் பந்தில் முரளி விஜய் 1 ரன்னில் ஆட்டமிழக்க, டி காக் 6 ரன்களில் ஏமாற்றினார். சிறிதுநேரம் போராடிய அகர்வால் ஒருமுறை கண்டம் தப்பி 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் பீட்டர்சன் தன் பங்குக்கு 33 ரன்கள் அடித்து வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 1 ரன்னில் ஏமாற்றினார். தனி ஆளாகப் போராடிய டுமினி பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார். 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து போராடிய டுமினியை ஸ்டார்க் அனுப்பி வைத்தார். அதன்பின் டெல்லி அணியின் தோல்வி உறுதியானது. இருப்பினும் கேடர் ஜாதவ் கடைசி நேரத்தில் (20 பந்துகளில் 37 ரன்கள்) வெற்றிக்கு முயற்சித்துப் பார்த்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

 

யுவராஜ் ரன்: 68 / பந்து : 29 / பவுண்டரி: 1 / சிக்ஸர்: 9
யுவராஜ் ரன்: 68 / பந்து : 29 / பவுண்டரி: 1 / சிக்ஸர்: 9
SHARE