கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து விரைவில் தீர்வு காணும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து பேசுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் காங்கிரஸ், அகில அலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் மஹிந்த அரசின் கூட்டணியிலிருந்து விலகின.
இதையடுத்து கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு பெரும்பான்மையை இழந்தது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையை நிர்வகிப்பதில் நெருக்கடிகள் தோன்றின. முதலமைச்சர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது குறித்து மு.கா., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே இழுபறி நிலை தோன்றியிருந்தது. இந்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டே இந்தச் சந்திப்பு ஏற்படுத்தப்பட்டது என்று தெரியவருகிறது.
இதேவேளை தேசிய நிறைவேற்றுச் சபை நாளை கூடுகிறது என்றும், இந்தக் கூட்டத்திலும் சம்பந்தன், கிழக்கு மாகாண விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றம் என்பன குறித்து விவாதிப்பார் என்று தெரியவருகிறது.