ரத்மலான அணி சம்பியனாக தெரிவு

123

அபு அலா

விழிப்புலனற்றோர் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு கிழக்கு மாகாண பிரிலியண்ட் மற்றும் கொழும்பு ரத்மலான பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஒலிப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ரத்மலான பார்வையற்றோர் கிரிக்கெட் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

மட்டு. உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவிவை முன்னிட்டு கிழக்கு மாகாண பிரிலியண்ட் மற்றும் கொழும்பு ரத்மலான பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒலிப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி (12) மட்டக்களப்பு சிவாநந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரத்மலான அணி கிழக்கு மாகாண அணியை துடுப்பெடுத்தாடுமாறு  கேட்டுக்கொண்டதற்கிணங்க கிழக்கு மாகாண அணி 15 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 94 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 14.2 ஓவர்களில் 95 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ரத்மலான அணித் தலைவர் திமுத்த பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

இப்போட்டிக்கு கிழக்கு மாகாண பொதுச்சபை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம் பிரதம விருந்தினராகவும், மன்முணை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் சிறப்பு விருந்தினராகவும், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி மற்றும் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் வணக்கத்துக்குரிய சுவாமி ஜு நீலமாதவானந்தர், சங்கத்தின் ஆலோசகரும் கிழக்கு மாகாண அணி பயிற்சிவிற்பாளருமான ரி.விநாயகமூர்த்தி ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற ரத்மலான பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்குரிய சம்பியன் கிண்ணத்தையும், வீரர்களுக்குரிய பதக்கம் மற்றும் பரிசில்களை இப்போட்டியின் பிரதம விருந்தினர் கிழக்கு மாகாண பொதுச்சபை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம் வழங்கி வைத்தார்.

SHARE