ரூ..400 கோடி பாரிய வற்வரி மோசடி – 280, 120 வருட கடூழிய சிறைத்தண்டணை

290
சுமார் 400 கோடி ரூபாவுக்கு மேல் வருமான வரித் திணைக்களத்தில் வற்வரி மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள 3வது மற்றும் 7வது குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட 280 வருடம் மற்றும் 120 வருட கடூழிய சிறைத் தண்டனையை நேற்று முதல் அமுல்படுத்துமாறு கொழும்பு பிரதான மேல்நீதிமன்ற நீதவான் தேவிகா அலிவேரா தென்னக்கோன் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய “வற்” வரி மோசடியாக கருதப்படும் இந்த வற் வரி மோசடி தொடர்பாக மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்றாவது பிரதிவாதியான வர்த்தகர் ரiத் மொஹமட் முர்ஷித்துக்கு 280 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஏழாவது பிரதிவாதியான நாகூர் அடுவை மொஹமட் ஹஸ்தினி என்ற அப்துல் இப்றாஹீமுக்கு 120 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டிருந்தன.

பிரதிவாதிகள் இருவரின் உடல் நிலை சரியில்லை என்றும் அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி வசந்த வணிகசேகர கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேல் நீதிமன்ற நீதவான் பிரதிவாதிக்கு தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்குமாறும் சிறைச்சாலை அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.

இரகசியப் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் காரணமாக பிரதிவாதிகள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வற் வரி மோசடி தொடர்பாக இந்த வழக்கில் மோசடி காரணமாக நாட் டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை கருத்திற்கொண்டு இவர்கள் மோசடி செய்த தொகையைப் போன்று மூன்று மடங்கு தொகையுடன் தண்டப்பணத்தையும் அரசுக்கு செலுத்த வேண்டுமென முன்னாள் மேல் நீதிமன்ற நீதிவான் குமுதினி விக்கிரமசிங்க சகல பிரதிவாதிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

2014 செப்டம்பர் மாதம் 26ம் திகதி வழங்கிய இந்த உத்தரவுக்கமைய 3வது பிரதிவாதியான மொஹமட் முர்ஷித் 1119 கோடியே 80லட்சத்து 24ஆயிரத்து 454ரூபா 65 சதத்தை அரசுக்கு செலுத்துவதுடன் தண்டப் பணமாக 635 கோடியே 11லட்சத்து 87ஆயிரத்து 789ரூபா 20 சதத்தை செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

7வது சந்தேக நபராக அப்துல் இப்றாஹிமுக்கு 1198 கோடியே 80லட்சத்து 24ஆயிரத்து 454 ரூபா 65சதத்தை அரசுக்கு செலுத்துவதுடன் தண்டப் பணமாக 249 கோடியே 54லட்சத்து 21ஆயிரத்து 680 ரூபா 40 சதத்தை தண்டப்பணமாகவும் செலுத்த வேண்டு மென்றும் உத்தரவிடப்பட்டது.

பிரதிவாதிகள் இந்த தொகையை செலுத்தத் தவறின் அவர்களது சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு அதற்கான பணம் அறவிடப்படும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 8 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்த 2014.09.26ம் திகதி வற் வரி மோசடியுடன் தொடர்புடைய 14 பிரதிவாதிகளுக்கும் தண்ட னைகள் வழங்கப்பட்டன.

எனினும் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த மேற்படி 3வதும் 7வதும் பிரதிவாதிகள் இருவரும் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர்.

இவர்கள் ஆஜர்படுத்திய இரகசிய பொலிஸார் 2014.09.26ம் திகதி தீர்ப்புக்கு அமைய சிறைத் தண்டனை நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கமைய பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 280 வருட மற்றும் 180 வருட சிறைத்தண்டனையை நேற்று 10ம் திகதி அமுல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக இந்த சிறைத்தண்டனையை வழங்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, வற் வரி மோசடி தொடர்பான வழக்கில் பிரதிவாதிகள் 14 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6 பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வருமான வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக விருந்த ஞான திலக்க த சொய்ஸா ஜயதிலக்க மற்றும் திணைக்களத்தின் ‘வற்’ வரி பிரிவின் உதவி ஆணையாளராக இருந்த ஆனந்த அம்பேபிட்டிய உட்பட பிரதிவாதிகள் 6 பேருக்கும் குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கிணங்க சிறைத்தண்டனை மற்றும் தண்டப் பணம் என்பவற்றுடன் அரசுக்கு அறவிட வேண்டிய தொகை குறித்தும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த மோசடிக்கு தொடர்புடைய பாகிர் மொஹமட், ஷிபாட் அல்லது ரியாத் மொஹமட் சுபைர் அவாமி, மொஹமட் அமீர், இர்ஷாத் என்கிற மொஹமட் நiர் காதர், மொஹமட் காமில், குதுபுதீன், அப்துல் வதுத் என்ற டீரா, பைரு அலி, மற்றும் மொஹமட் கானில் ஆகிய வழக்கின் 4, 5, 6, 8, 9வது மற்றும் 12வது பிரதிவாதிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள இவர்களை கைது செய்வதற்கும் நீதிமன்றம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE