23.07.2017ம் நாள் கறுப்பு ஜூலை நினைவெழுச்சி போராட்டம் லண்டனில் WESTMINSTER SW1A 2AA எனும் இடத்தில் மாலை 5.00 முதல் நடைபெற்றது.

*இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும்.
*இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள கையளிக்கப்பட்ட வேண்டும்.
*அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
*வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும்.
*தமிழர் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும்
இதை உணர்ந்த சமூகமாக தொடர்ச்சியாக எங்கள் அரசியல் அபிலாசைகளை நாம் வாழும் தேசங்களில் உறுதியோடு எடுத்துரைப்போம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் நினைவு போராட்டம் பெருமளவிலான புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்புக்களோடு நடைபெற்றுள்ளது.




இலங்கையில் 1983ம் ஆண்டில், கறுப்பு ஜூலை இனப் படுகொலைகள் இடம்பெற்று முப்பத்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. பல அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிட்ட போதிலும், அன்றைய நிலைமைகள் அவ்வாறே இன்றும், அதே செயற்பாடுகளே தொடர்கின்றன.
கடந்த 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் நாள் யாழ் திருநெல்வேலியில் விடுதலைப்புலிகளின் முதலாவது பெரிய தாக்குதலின் போது 13 இலங்கை படையினர் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத சிங்கள அரசு பெருமெடுப்பிலான இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது இலங்கையின் பல இடங்களிலும் சிங்களவர்களாலும் இலங்கை இராணுவத்தினராலும் தமிழர்கள் அழிக்கப்பட்டனர் . ஓடி ஒழிக்க இடமில்லாமல் திரிந்த தமிழர்கள் தேடி தேடி அழிக்கப்பட்டனர்.
அன்று சிறைக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகள் இது வரையிலும் தண்டிக்கப்படாத நிலையில் படுகொலைகளை பார்த்துக் கொண்டு தடுக்க முயலாத காவலர்கள் இன்றும் தண்டிக்கப்படவில்லை.
நேரடியாக படுகொலைகளை மேற்கொண்ட யாரும் இதுவரையிலும் தண்டிக்கப்படவில்லை. இவை தொடர்பாக எந்தவொரு நீதிமன்றமும் கேள்வி எழுப்பவில்லை. இனியும் கேட்பார்களா? அந்த கேள்வியும் தொக்கியே நிற்கிறது. இதுவே இலங்கையின் ஜனநாயகம் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆட்சிகள் மாறி, மாறி அதிகாரத்துக்கு வந்தபோதும், ஒரு அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சிறைச்சாலைக்குள் தமிழ் கைதிகளைப் படுகொலை செய்யும் நாகரிகம் மட்டும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது
சிங்கள அரசு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் தாம் ஏற்றுக்கொண்ட பிரகடனங்களுக்கு மாறாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
சுயாதீன சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்கிய சட்ட வலையமைப்பு, இராணுவ அபகரிப்புக்குட்பட்ட மக்களின் நிலவிடுவிப்பு, காணாமல் போனோருக்கான நீதி என எதையும் நடைமுறைப்படுத்த மறுக்கிறது.
வலிகளே வாழ்க்கையாய் போன ஈழத்தமிழினம் செய்வது யாதென்றறியாது மரத்துபோய் நிற்கும்வேளையில், ஈழத்தில் கோப்பப்புலாவு, மருதங்கேணி, முல்லைத்தீவு போன்ற பல இடங்களில் தொடர்போராட்டங்கள் நூறு நாட்களைத்தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆகவே தாயக உறவுகளும் புலம்பெயர் மக்களும் ஒன்றாய் எம் ஒற்றுமையை உலகுக்கு உரக்க சொல்லவேண்டிய தருணம் இது.