லாவோஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் விமான விபத்தில் பலி

637
லாவோசின் தலைநகர் வியன்டையனிலிருந்து இன்று காலை கிளம்பிய விமானப் படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இன்று காலை தலைநகரிலிருந்து கிளம்பிய இந்த விமானம் 470 கி.மீ தொலைவில் உள்ள சியாங்கூங் மாகாணத்தின் அருகில் விழுந்தது.

இதில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரும், துணைப் பிரதமருமான டுவாங்க்சே பிச்சிட், அவரது மனைவி, நகர கவர்னர் உட்பட மூத்த அதிகாரிகள் பலர் பயணம் செய்ததாகவும், அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் பலியானதாகவும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் கிட்டத்தட்ட 20 பேர் பயணம் செய்ததாகவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற அதிகாரபூர்வ விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தனக்கு தகவல் வந்ததாக தாய்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சேக் வன்னமெதி தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கையோ, வேறு தகவல்களோ தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் லாவோசிலிருந்து இந்த விபத்து குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை என்று கூறப்படுகின்றது.

இதற்கு முன்னால் கடந்த அக்டோபர் மாதம் லாவோஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பக்சே விமான நிலையத்தில் பெரும் புயலில் சிக்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 49 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

SHARE