லிட்டில் மாஸ்டரின் மறுபக்கம் சகாப்த நாயகன் சச்சின் ஸ்பெஷல்

304
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் அதிகம் பயன்படுத்திய வார்த்தை சச்சின்.1989ம் ஆண்டு தனது 16 வயதில் ஒரு குட்டி பையனாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட வந்தார் சச்சின் டெண்டுல்கர்.

இம்ரான்கான் வீசிய பவுன்சர் பந்தில் மூக்குடைந்து ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவ உதவியை மறுத்து தொடர்ந்து விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.

1994ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதல் சதத்தை அடித்து சாதனை பயணத்தை தொடர்ந்தார்.

மொத்தம் 6 உலகக்கிண்ணங்களில் விளையாடிய சச்சினுக்கு, மறக்க முடியாத உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 1999ம் ஆண்டு உலகக்கிண்ணம். அப்போது அவரது தந்தை தந்தை ரமேஸ் டெண்டுல்கர் காலமானார்.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு பின்னர் மீண்டும் போட்டியில் விளையாட புறப்பட்டார் சச்சின்.

தந்தை மறைந்து சில நாட்களிலேயே ஆடுகளத்துக்குத் திரும்பிய சச்சின், கென்யாவுக்கு எதிரான போட்டியில் 140 ஓட்டங்களை குவித்து அந்த சதத்தை தமது தந்தைக்காக அர்ப்பணிப்பதாக அறிவித்து நெகிழ வைத்தார்.

யாரும் எளிதில் எட்ட முடியாத, ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் என்ற மைல்கல்லை முதன் முதலில் தொட்டு அனைவரையும் வியக்க வைத்தார். பந்துவீச்சிலும் பட்டையை கிளப்பியுள்ளார் சச்சின்.

கடந்த 1993ம் ஆண்டு ஹீரோ கிண்ணப் போட்டியில் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 195 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்காவுக்கு இறுதி ஓவரில் 6 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

அப்போது அசாருதீன் 20 வயதே ஆன சச்சின் மீது நம்பிக்கை வைத்து அவரை பந்து வீசுமாறு கூறினார்.

இளம் சச்சினும் நம்பிக்கையுடன் பந்து வீசி அந்த ஓவரில் வெறும் 3 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். இதையடுத்து இந்தியா 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

”நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனி மனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்!”- 1998ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தபோது, அந்த அணியின் அணித்தலைவர் மார்க் டெய்லர் சொன்ன வார்த்தைகள் இவை.

மேலும் 2011ம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற இந்திய அணியில் இருந்ததற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறி பெருமைப்பட்டவர்.

2013ம் ஆண்டு, கிரிக்கெட் இல்லாமல் தமது வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறி தனது 24 ஆண்டு சாதனை பயணத்தில் இருந்து விடைபெற்ற சச்சின், இன்னும் ஜாம்பவனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

SHARE