வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சியின் முன்னாள் தலைவருக்கு மரண தண்டனை

352
சிறுபான்மையின மக்களை ஒடுக்கிவந்த பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்காக 1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடைபெற்றது.

இந்த விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவாமி லீக் கட்சியில் இருந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்ட மொபாரக் ஹுசைன்(64) என்பவருக்கு டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பாயம் இன்று மரண தண்டனை விதித்தது.

வங்காள தேச பிரிவினைக்கு காரணமாக அமைந்த இந்தியா-பாகிஸ்தானுக்கிடையிலான போர்க்காலத்தின்போது, தனது சொந்த மாவட்டமான ப்ரஹ்மான்பாரியாவில் 33 பேரை கொன்ற குற்றச்சாட்டில் 3 நீதிபதிகளை கொண்ட இந்த தீர்ப்பாயம் மொபாரக் ஹுசைனை சாகும் வரை தூக்கிலிட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டுள்ளது.

வங்காளதேச பிரிவினையின்போது விடுதலை தர மறுத்த பாகிஸ்தானுக்கு ஆதரவான படைகளுடனும், ஜமாத்-இ-இஸ்லாமி படைகளுடனும் தொடர்பு வைத்திருந்த மொபாரக் ஹுசைன், ரஸாகர் என்ற பகுதியில் இந்தப் படைகளின் தளபதியாக இருந்தார்.

போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதையடுத்து, வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமான பின்னர், வங்காளதேசத்தின் விடுதலையை முன்னெடுத்துச் சென்று, வெற்றி கண்ட அவாமி லீக் கட்சியில் அவர் இணைந்தார்.

அவர் மீது போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடந்து, வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர், அவாமி லீக்கின் தலைமை கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் கட்சியில் இருந்து நீக்கியது.

அந்த வகையில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டு, மரண தண்டனையும் பெற்ற அவாமி லீக் கட்சியின் முதல் தலைவர் இவர், என்பது குறிப்பிடத்தக்கது

SHARE