இதனால், அந்த தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி பெரும்பான்மை பெற்றது. ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார்.
தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஷேக் ஹசீனா பிரதமராகி விட்டதாக குற்றம்சாட்டி வரும் கலிதா ஜியா, கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்ற தினமான அதே ஜனவரி 5-ம் தேதியை இந்த ஆண்டு ‘ஜனநாயக படுகொலை தினம்’ ஆக அனுசரிக்கப்போவதாக கலிதா ஜியா அறிவித்திருந்தார்.
இதையொட்டி, வரும் 5-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், டாக்கா நகரில் உள்ள வங்காளதேச தேசியவாத கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு தொண்டர்களுடன் கலிதா ஜியா ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த போலீசார் அவரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், எனவே, அந்த அலுவலகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர் நேற்றிரவு முழுவதையும் கட்சி அலுவலகத்திலேயே கழிக்க நேர்ந்தது.
அலுவலகத்தை சுற்றிலும் ஆயுதங்களுடன் ஏராளமான போலீசாரும், சில பெண் போலீசாரும் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வங்காளதேச தேசியவாத கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ஆயுதமேந்திய வீரர்களுக்கான வாகனங்கள், நீர் பீரங்கிகள், அதிரடிப்படை மற்றும் கலவரத் தடுப்பு வாகனம் போன்றவை அப்பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.