பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பது வழமையானதொன்றே. தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றினை எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்துவந்தவர்கள் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்புகளாகும். ஏனைய இயக்கங்கள் ஒவ்வொன்றும் போராட்டத்தினை காட்டிக்கொடுத்தன என்கின்றதானதொரு குற்றச்சாட்டு அவர்கள் மீது இருக்கின்றது.
ஆகவே இவர்களுடைய கருத்துக்களை தமிழரசுக்கட்சி உள்வாங்கிக்கொள்வதில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்றன தற்போது தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கா அல்லது மைத்திரிக்கா ஆதரவினை வழங்குவது என கட்சிகள் ஒன்றுகூடி ஆராய்ந்தன. இதில் அனைத்து கட்சிகளின் தலைவர்களுமே ஒன்றுபட்ட கருத்தினை முன்வைத்தனர். அதாவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ன தீர்மானத்தினை மேற்கொள்கின்றதோ அதற்கு அனைவரும் உடன்படுவது என்பதாகும்.
இது இவ்வாறிருக்க கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் வடமாகாண சபையிலுள்ளோர் தமது தனிப்பட்ட கருத்துக்கள் என ஆளுக்கொரு கருத்துக்களை தெரிவித்துள்ளமையானது சிறு முரண்பாடுகளைத் தோற்றுவித்ததே தவிர, எனினும் அது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தப்போவதில்லை. யாழ் மாவட்டத்தினை பொறுத்தவரையில், கடந்த வடமாகாண சபைத்தேர்தலில் 89000இற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற அனந்தி சசிதரன் சுயாதீனமாக பேசுவதற்கு உரிமை உண்டு. இவர் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவரும் கூட. தேசியப்பட்டியலில் வந்த சுமந்திரனை விட அனந்திக்கு அதிக உரிமை இருக்கின்றது. அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.
அதற்காக அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது, அனந்தி சசிதரன் அவர்கள் தனது தனித்த கருத்தினை வெளிப்படுத்தி தேர்தலை நிராகரியுங்கள் எனக்கூறுவது தவறானதொரு விடயம். சம்பந்தன், சுமந்திரன், மாவை மூவரும் ஆட்சிக்குவரும் அடுத்த அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்று செயற்படப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதில் உண்மையும் பொய்யும் இருக்கலாம். அடுத்த தகவலாக வுNயுவிற்கு தேர்தல் பிரசாரப்பணிகளுக்காக ஆறுகோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று வரைக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அங்கத்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் வரை வழங்கப்பட்டதாகவும், இது பிரசாரப்பணிகளுக்காக வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கு 30 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு என ஒரு பழமொழி இருக்கின்றது. பணத்தினை பெற்றுவிட்டு பிரசாரப்பணிகளை மேற்கொள்ளாதிருப்பதும் தவறு. இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றுவரைக்கும் தமிழ் மக்களின் விடுதலைக்காக போரிட்டதும் பேச்சுக்களை நடாத்தியதும் மாறிமாறி வந்ததொன்று.
சிங்கள மக்களைப்பொறுத்தவரையில் மஹிந்தவோ அல்லது மைத்திரியோ. தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் பிரச்சினைகளை ஓரளவு குறைத்துக்கொள்ளமுடியும். பொய்யான வாக்குறுதிகளை மைத்திரிபால அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு வழங்கியிருக்கின்றார். அது என்னவென்றால், வடகிழக்கு தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு, சமாதானம், அபிவிருத்தி என்பன போன்றவையாகும். எனினும் வடமாகாண சபைக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி பேசப்படவில்லை. இதுதொடர்பில் காலப்போக்கில் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படும் என்ற நிலைப்பாடே நிலவுகின்றது.
மூவின மக்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தினை மேற்கொண்டனர். சிங்கள மக்களும் மைத்திரியை ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். முஸ்லீம் மக்களும் அதற்கு ஒத்துப்போவதன் காரணமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் அதற்கு ஆதரவினைத் தெரிவித்தது. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் அவர்களுடன் கலந்துரையாடியே தீர்மானத்தினை பெறவேண்டும். இல்லையேல் ஆயுதப்போராட்டம் தான் இதற்கு தீர்வாகும் என்பது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கு நன்றாகத் தெரியும்.
ஒரு கட்சியில் இருந்துகொண்டு, அக்கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக, அக்கட்சிகளில் இருப்பவர்களே கருத்துக்களை தெரிவிப்பது சிறந்ததல்ல. வடமாகாண சபை முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள், கட்சிகளின் தலைவர்;கள் வாய்மூடி நிற்கின்றபொழுது, ஏனையவர்கள் அதற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவது தவறு என்பதையே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. தீர்மானங்களை கட்சியினர் மேற்கொள்கின்றபோது, அந்தத் தீர்மானங்கள் ஒத்துவராது எனத் அறிந்தவுடன் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கவேண்டும். அதன் பின்னர் சகுனியாக செயற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டையும் இன்று ஓரங்கட்டிய நிலையிலேயே, இன்று மைத்திரிபால சிறிசேன அவர்களை TNA ஆதரிக்கின்றது. இதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. காரணம் காலத்தின் தேவைகருதி இவ்வாறான தீர்மானங்கள் தெரிவிக்கப்படுகின்றது. இது தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வும் அல்ல. வடமாகாண சபை, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போன்ற கட்சிக்குள் உள்ள பலங்களை வெளியிடலாமே தவிர, பலவீனங்களை வெளிவிடக்கூடாது. தமிழ்த் தேசிய உணர்வு தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் இருக்கவே செய்கின்றது.
அப்படி தமிழ்த்தேசிய உணர்வு என்று இன்னமும் கூறிக்கொண்டிருந்தால் சிங்கள இனத்திற்கெதிராகவே ஆயுதமேந்திப்போராட வேண்டிய நிலை ஏற்படும். சிங்கள இனத்திற்கு அடிபணியாத தலைவர் பிரபாகரன் என்று சொன்னால் அது மிகையில்லை. தமிழ் பேசும் மக்களுக்கும் ஒரு மாற்றம் தேவை என்கிற காரணத்தினாலேயே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவளிப்பது என தெரிவித்திருக்கிறது. மைத்திரியும் எமது பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தராவிட்டால், எதிர்வரும் காலங்களில் மீண்டும் மஹிந்தவை ஆதரிப்பதைத் தவிர, இரு கட்சிகளும் இனவழிப்பினை செய்தவர்கள் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.
குறைகளைக் கூறிக்கொள்வதாயின் இன்னும் பலவற்றைக் கூறிச்செல்லலாம். அவற்றை ஓரங்கட்டிவிட்டு தமிழ் கட்சிகள் தமிழினம் ஒன்றுபடுவதற்கான வழிகள் பற்றியதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே எந்த அரசாங்கங்கள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றார்களோ அந்த அரசுடன் பேசி முடிவினைப் பெற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உள்ளது. இதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமை;பபினை குற்றஞ்சாட்டி அவர்களுக்கு துரோகப் பட்டம் சூட்டுவது தவறான விடயமாகும்.
தமிழ் மக்களின் விடயத்தில் பொறுமை காத்த நாம் இன்னும் பொறுமை காக்கவேண்டும் என்பதன் அவசியம் புலப்படுகின்றது. ஆகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க மைத்திரிபால அவர்களை ஆதரிப்போம். அவரும் சரியான தீர்வினை பெற்றுத்தராத போது அவருக்கெதிராக போர்க்கொடியினை தூக்க முயலவேண்டிய நிலையும் ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.