காரைநகரில் இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் உண்மையான குற்றவாளிகள் நிறுத்தப்படாது வேறு நபர்களே நிறுத்தப்பட்டுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று சபையில் குற்றம்சாட்டினார்.
அத்துடன், இன்று வடபகுதி முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் விசனம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காரைநகரில் இரு சிறுமிகள் கடற்படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
வடக்கு, கிழக்கில் வாழும் பெண்களின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது. எனவே இச் சபையில் அதனை சுட்டிக்காட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைநகரில் ஊரி என்னுமிடத்தில் 11 வயது சிறுமியொருவர் காரைநகர் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
இது தொடர்பாக பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று இன்னுமொரு 10 வயது சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் கொடூரமான செயல். இதனோடு தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மேலும் இடம்பெறாத வண்ணம் தடுப்பதை உறுதி செய்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வட மாகாணம் இன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. இதனை பல தடவைகள் இச் சபையில் சுட்டிக்காட்டினோம்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இந்த கொடூரமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் சில கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் உண்மைக் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. வேறு நபர்களே அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டதாகவே கூறப்படுகின்றது.
இதனால் முறைப்பாடு செய்தவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?
கைது செய்யப்பட்டு அடையாள அணி வகுப்பில் நிறுத்தப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா? இது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் திருப்திகரமானதாக இல்லை.
எனவே, இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
சிறிய சம்பவத்தைக் கூட்டமைப்பு பெரிதுபடுத்த முயற்சி செய்கின்றது – பிரதமர்
இந்தியா உட்பட உலகில் தினமும் எத்தனையோ வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆயினும் காரைநகரில் நடைபெற்ற சம்பவத்தை ஒரு சிறிய சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துக்குப் பெரிதுபடுத்திக் காட்ட முயற்சித்து வருகின்றது. இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் பிரதமர் டி.எம்.ஜயரத்ன.
நாடாளுமன்றில் காரைநகர் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் விடுத்த விசேட கூற்றுக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 15ம் திகதி காலை 7 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்ற சிறுமியயாருவரை காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் சீருடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார்.
இதன்போது அங்கு வந்த கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அதன்போது தாயார், மகள் நேரகாலத்துடன் பாடசாலை விட்டு வந்தமை தொடர்பில் அதிபரிடம் வினவியுள்ளார்.
தினமும் மகள் இவ்வாறு வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அச்சிறுமி அக்காலப்பகுதியில் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் அச்சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். வைத்தியசாலைப் பொலிஸார் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 9 கடற்படைச்சிப்பாய்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இரண்டு பேர் விடுமுறை எடுத்திருந்ததால் 7 பேரே அடையாள அணிவகுப்பில் உட்படுத்தப்பட்டனர்.
எனினும் இவர்களில் எவரையும் சம்பந்தப்பட்டவர் அடையாளம் காட்டவில்லை. அதன்பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை இதுபோல் பல சம்பவங்கள் இந்தியா உட்பட உலகெங்கும் தினமும் இடம்பெறுகின்றன. ஆனால், காரைநகரில் இடம்பெற்ற ஒரு சிறு சம்பவத்தை பெரிதுபடுத்தி சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.