வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்தவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையினால் விசேட நடமாடும் மருத்துவமுகாம் இன்று மன்னார் இரணைஇலுப்பைக்குளத்தில் நடைபெற்றது.
அண்மையில் இரணையிலுப்பைக்குளத்திற்கு விஜயம் செய்த வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்களிடம் மக்கள் முறையிட்டதற்கிணங்க அமைச்சரின் பணிப்பின்பேரில் இம்மருத்துவமுகாம் நடாத்தப்பட்டுள்ளது. பல்துறைசார் வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்ட இவ்மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
புழம்பெரும் கிராமமான இரணைஇலுப்பைக்குளம் கடந்த யுத்தத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் முற்றாக வெளியேற்றபட்ட இந்தபிரதேசம் 2010 ஆண்டிற்கு பின்னர் மக்கள் மீள்குடியேறியுள்ளனர். இப்பிதேசத்தில் கிராமிய வைத்தியசாலை அமைந்துள்ளபோதும் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தின் குறிப்பிட்டநாட்களில் மட்டுமே மருத்துவ வசதி இம்மக்களிற்கு கிடைக்கப்பெற்றுவந்தது. இந்த நிலையில் அண்மையில் இப்பிரதேச கிராமிய வைத்தியசாலைக்கு திடீர்விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சரிடம் மக்கள் முறையிட்டதை தொடர்ந்து அமைச்சரின் பணிப்பின்பேரில் இம்மருத்துவமுகாம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இம்மருத்துவமுகாமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்த பின்னர் ஊடகங்களுக்கு; கருத்துதெரிவித்த மாகாண சுகாதார அமைச்சர் அவர்கள் கௌரவ வடமாகாண முதலமைச்சர் அவர்களின் சிந்தனைக்கிணங்க மக்களைநோக்கிய சேவை என்பதனடிப்படையில் மக்களைநோக்கிய சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம். கடந்தமாதம் வவுனியா புளியங்குளத்தில் மக்கள் குறைநிவர்த்தி நடமாடும் சேவையொன்றினை நடாத்தியிருத்தோம். விசேட வைத்தியசேவைகளை பெற்றுக்கொள்ளமுடியாத தூரஇடங்களில் வாழுகின்ற மக்களிற்கு மேலதிக மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்குடன் பின்தங்கிய பிதேசங்களில் இவ்வாறாக மருத்தவமுகாம்களை நடாத்த தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறான விசேட மருத்துவ முகாம்களில் பல்துறைசார் வைத்திய நிபுணர்களின் சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ளமுடியும். குறிப்பாக மகப்பேறு, சத்திரசிகிச்சை, என்புமுறிவு, கண்சிகிச்சை,பல்மருத்தவம், காது,மூக்கு, தொண்டை, பொதுமருத்துவம், குழந்தைநலமருத்துவம் செயற்கை அவயவம் பொருத்துதல் மற்றும் மருத்துவ ஆய்வுகூட சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான மருத்துவமுகாமொன்று இம்மாத இறுதியில் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, துணுக்காய் பிரதேசத்தில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். மருத்துவர் என்பதன் அடிப்படையில் இம்மருத்துவமுகாமில் நோயாளிகளை நேரடியாக அமைச்சர் அவர்களும் பரிசோதித்தமை குறிப்பிடத்தக்கது.